லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தபடி அளித்த பேட்டி மீண்டும் வெளியானது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பாபா சித்தி கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்றது. தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத வழக்குகளில் கைதாகி குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், பாபா சித்திக் படுகொலை, பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் என லாரன்ஸ் பிஷ்னோய் பெயர் செய்திகளில் அடிபட்டு வருகிறது. எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது குஜராத் சபர்மதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளே இருந்தவாறே குற்றச்செயல்களை அரங்கேற்றி வருகிறார்.
இதனிடையே, பஞ்சாப் சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய் இருந்தபோது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவரது பேட்டி வெளியானது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வந்த நிலையில், அதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வீடியோ பேட்டி சமூக வலைதளங்களிலும் வெளியானது. இதுதொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த வீடியோ மீண்டும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, நீதிபதிகள் அனுபிந்தர் சிங்கர், லபிதா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறையில் இருக்கும் குற்றவாளி ஒருவரை வீடியோ பேட்டி எடுப்பதற்காக ஸ்டூடியோ போன்ற வசதியை மூத்த சிறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இது குற்றத்துக்கு புகழ் சேர்ப்பது போல் உள்ளது. அந்தக் குற்றவாளியை மேலும் குற்றங்கள் செய்ய தூண்டுவது போல் இது அமைந்துள்ளது. இந்த வீடியோ, தொடர்பாக தீவிர விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.