திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதம் செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்தச் சூழலில் இன்று திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி திருப்பதிக்கு வந்து, நான் தவறு செய்து இருந்தால் என் குடும்பமே அழிந்து போகட்டும் என சூடம் ஏற்றி சத்தியம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டு, குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நினியோகப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம், லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு கருப்பு பட்டியலில் வைத்தது.
இந்நிலையில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் கருணாகர் ரெட்டி திருப்பதிக்கு வந்து கோவில் குளத்தில் நீராடியதோடு கோவில் நுழைவு வாயில் பகுதிக்கு வந்து, தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி சத்தியம் செய்தார். நுழைவு வாயில் பகுதியில் சூடம் ஏற்றிய கருணாகர ரெட்டி, “திருப்பதி லட்டுவில் நான் கலப்படம் செய்திருந்தால் என் குடும்பமே சர்வ நாசமாய் வேண்டும்’ எனக்கூறி சூடத்தை அணைத்து சத்தியம் செய்தார்.
அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக கருணாகர் ரெட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனால் திருப்பதி நுழைவு வாயில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கருணாகர ரெட்டி, ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டி ஆட்சி காலத்திலும், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்திலும் திருப்பதி அறங்காவலர் குழுத்தலைவராக இரண்டு முறை கருணாகர ரெட்டி பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.