கடந்த 2012 -ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் ரங்கராஜன் சத்தீஷ்கர் மாநிலத்தில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருடன் பணியாற்றிய பெண் ஐபிஎஸ் அதிகாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அருண் ரங்கராஜன். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன
இந்நிலையில், கடந்த ஆண்டு அருண் ரங்கராஜன் கர்நாடகாவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். கர்நாடகாவில், கலாபுர்கி மாவட்டத்தில் பணியாற்றி வந்த அருண் ரங்கராஜனுக்கு, அங்கு பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த உதவி ஆய்வாளரின் கணவருக்கு இவர்களது பழக்கம் தெரியவந்ததும், இது குறித்து அருண் ரங்கராஜனின் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
பெண் காவல் அதிகாரி உடனான பழக்கம் குறித்து தனது மனைவியிடம் சொன்ன காவல் அதிகாரியை அருண் ரங்கராஜன் கடுமையாக தாக்கிய நிலையில், இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து ஐபிஎஸ் அருண் ரங்கராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அருண் ரங்கராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும், இந்த விவகாரம் காரணமாக, அருண் ரங்கராஜனின் மனைவி, விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். இதையடுத்து, பெண் காவல் உதவி ஆய்வாளரை ஈரோடு கோபிசெட்டிபாளையத்துக்கு அழைத்து வந்து அவருடன் வாழ்ந்து வந்துள்ளார் அருண் ரங்கராஜன். கடந்த பிப்ரவரி மாதம், அருண் ரங்கராஜன், அந்தப் பெண்ணை தாக்கிய நிலையில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அருண் ரங்கராஜன் தனது வீட்டுக்கு தானே தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.