அமித் ஷா திட்டவட்டம்: சொர்க்கத்தில் இருந்து இந்திராவே திரும்பினாலும் 370-வது சட்டப்பிரிவை மீட்டெடுக்க முடியாது..!

சொர்க்கத்தில் இருந்து இந்திராவே திரும்பினாலும் 370-வது சட்டப்பிரிவை மீட்டெடுக்க முடியாது என அமித் ஷா தெரிவித்தார். மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஷிந்த்கேடா மற்றும் சாலிஸ்கான் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “சில நாட்களுக்கு முன்பு உமேலா குழுவைச் சேர்ந்தவர்கள், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை சந்தித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டனர். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், SC – ST – OBC-க்கான இடஒதுக்கீட்டை குறைக்க வேண்டும். ராகுல் காந்திக்கு நான் சொல்கிறேன், உங்கள் நான்கு தலைமுறைகளால் கூட SC – ST – OBC க்கான இடஒதுக்கீட்டை வெட்டி முஸ்லிம்களுக்கு கொடுக்க முடியாது.

ராகுல் பாபா, நீங்கள் அல்ல உங்களது நான்கு தலைமுறை வந்தாலும் SC – ST – OBC யினருக்கான இடஒதுக்கீட்டை குறைத்து இஸ்லாமியருக்கு வழங்கமுடியாது. என்ன வந்தாலும் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டுவர முடியாது. சொர்க்கத்தில் இருந்து இந்திராவே திரும்பினாலும் 370-வது சட்டப்பிரிவை மீட்டெடுக்க முடியாது என அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.