காவல்துறை அத்துமீறல்களை மு.க.ஸ்டாலின் தடுக்க வேண்டும்

பொதுமக்களின் நண்பனாக விளங்க வேண்டிய காவல்துறை பொதுமக்களை அடித்து துன்புறுத்தும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதை பார்க்கும்போது, முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்கள்தான் பொதுமக்களின் நினைவுக்கு வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம் மலையடிப்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலமுருகனை காவல்துறை தாக்கிய வீடியோ சமூகவலைத் தளங்களில் பரவியதன் காரணமாக தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இதேபோன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை தாட்கோ நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரான்சிஸ் அந்தோணியை தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, காவல்துறை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அருகே இடையப்பட்டி வில்வனூர் மேற்கு காட்டை சேர்ந்த முருகேசன் என்பவர் காவல்துறையினர் தாக்குதலுக்கு ஆளாகி மரணம் அடைந்துள்ள நிலையில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தவறு செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. எனவே தவறு செய்திருந்தால், தொடர்புடைய நபர்களிடம் உரிய விசாரணை நடத்தி, அதற்கான ஆதாரங்களை திரட்ட வேண்டும். அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர, காவல்துறை தாக்குதல் நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல.

இது மனித உரிமையை மீறும் செயல். எனவே முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, இதுபோன்ற போலீஸ் அத்துமீறல்கள் இனி நடைபெறாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். சட்டத்துக்குட்பட்டு செயல்படுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.