நாட்டின் 78-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலும் மற்ற முதலமைச்சர்கள் அவரவர் கோட்டையில் தேசிய கொடி ஏற்றினர். அதனைத்தொடர்ந்து ஒடிசா துணை முதலமைச்சரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான பிரவதி பரிதா நேற்று கட்டாக் நகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.
பின்னர் பிரவதி பரிதா செய்தியாளர்களிடம், “ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும். மாதவிடாய் சுற்றின் முதல் அல்லது இரண்டாவது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். என்றாலும் இந்த விடுமுறையை எடுத்துக்கொள்வது பெண்களின் விருப்பத்தை பொறுத்தது” என தெரிவித்தார்.