தமிழக அரசு நடவடிக்கை புயலால் அழிந்த தனுஷ்கோடியில் 60 ஆண்டுக்குப்பின் சுகாதார மையம் மற்றும் அங்கன்வாடி அமைக்க பரிந்துரை..!

புயலால் அழிந்து வரலாற்றில் வாழும் தனுஷ்கோடியில் சுகாதார மையம் மற்றும் அங்கன்வாடி அமைக்க பொது சுகாதார இயக்குனரகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு பகுதியில் வங்கக்கடலும், இந்திய பெருங்கடலும் கூடுமிடமாக தனுஷ்கோடி அமைந்திருந்தது. 1964-க்கு முன்பு வரை தனுஷ்கோடி ஒரு பெரும் வர்த்தக நகரமாக விளங்கியது.

இலங்கை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே கப்பல் போக்குவரத்து, சென்னை – தனுஷ்கோடி இடையே போட் மெயில் ரயில் போக்குவரத்து, தபால் நிலையம், பள்ளிக்கூடம் மற்றும் அரசு அலுவலகங்கள் என பரபரப்பாக இயங்கி வந்தது.

கடந்த 1964, டிசம்பர் 23-ஆம் தேதி மன்னார் வளைகுடா கடலில் வீசிய பெரும் கோரப்புயலில் ஒட்டு மொத்த நகரமும், கடல் அலையின் கோரதாண்டவத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் வீடுகள், அரசு அலுவலகங்கள், போக்குவரத்து வழித்தடங்கள், குடியிருப்புகள் என அனைத்தும் உருக்குலைந்து நிலையில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அந்த புயலின் எச்சங்களாக கட்டிடங்களும், தேவாலயமும் தனுஷ்கோடியின் அடையாளமாய் இருக்கும் நிலையில் இந்த கோரப்புயலுக்கு பின் தனுஷ்கோடியை, மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக தமிழக அரசு அறிவித்தது.

அதன்பின்னர், வரலாற்று சுற்றுலா பகுதியாக இருந்த தனுஷ்கோடியை புத்துயிர் பெறும் நகரமாக மாற்ற முடிவு செய்த மத்திய அரசு, கடந்த 2016-ல் முகுந்தராயர்சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை தார்ச்சாலை அமைத்து 52 ஆண்டுகளுக்கு பிறகு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியது. இத்தனை தொடர்ந்து தனுஷ்கோடிக்கு பள்ளிக்கூடம், கலங்கரை விளக்கம், தபால் நிலையம் என படிப்படியாக கொண்டு வரப்பட்டது.

இப்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் பூர்வகுடி மீனவர்கள், தற்காலிக குடிசைகள் அமைத்து வாழ்வாதாரத்திற்காக தங்கி வருகின்றனர். தினசரி வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை நம்பி சங்கு கடைகள், மீன் உணவு ஓட்டல், பலசரக்கு கடைகள் அமைத்து வருமானம் ஈட்டுகின்றனர்.

ஆனால்  60 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு  மின்சார வசதி இல்லாததால் மீனவ மக்கள் வாழும் குடிசையில் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் பேனல்களை பயன்படுத்தி, மின் தேவையை பூர்த்தி செய்கின்றனர். எனினும் மாலை 6 மணிக்கு மேல் தங்குவதற்கு அரசு அனுமதி இல்லாததால்  இதுவரை குடிநீர், மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசு ஏற்பாடு செய்யவில்லை.

தனுஷ்கோடி, அரிச்சல்முனை சுற்றுலாத்தலம் என்பதால் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 2 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் 500-க்கும் மேற்பட்ட மீனவ மக்களும் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் மக்கள், பள்ளி குழந்தைகள் அனைவரும் சாதாரண மருத்துவத்திற்கு கூட 20 கிமீ தொலைவில் உள்ள ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதனால் இப்பகுதிக்கு வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் மீனவ மக்களின் வாழ்வியலை கருத்தில் கொண்டு தமிழக அரசின் பொது சுகாதார இயக்குனரகம், தனுஷ்கோடியில் நிரந்தர சுகாதார வசதியை ஏற்படுத்தும் வகையில் அங்கு சுகாதார மையம் மற்றும் அங்கன்வாடி மையம் அமைக்க மத்திய, மாநில சுகாதார அமைப்புக்கு பரிந்துரை செய்துள்ளது. இது நிறைவேறும்பட்சத்தில் அங்கு பகல் நேரத்தில் மட்டும் இயங்கக் கூடிய மருத்துவர் செவிலியர் பணிபுரியும் வகையில், சுகாதார மையம் அமைக்கப்படும் என தெரிய வருகின்றது.