Happy Vinayaka chathurthi 2024: விநாயகர் சதுர்த்தி வரலாறு..!

ஆவணி மாதம் செப்டம்பர் 7-ஆம் தேதி சனிக்கிழமை வளர்பிறையில் வருகின்ற நான்காவது திதியான சதுர்த்தி திதி ‘விநாயகர் சதுர்த்தி‘ தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் வீடுகளில் மாவிலை தோரணங்களால் அலங்கரித்து விநாயகருக்கும் அலங்காரம் செய்து அவருக்கு அவல் பொரி, பழங்கள், மோதகம், கொழுக்கட்டை படையலிட்டு பலரது வீடுகளில் வணங்கப்படுகின்றது.

மராட்டிய மன்னர் சிவாஜி முகலாயர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது குடிமக்களிடையே தேசியவாத உணர்வை ஊக்குவிப்பதற்கு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். அதன்பின்னர், 1893 -ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் அரசியல் கூட்டங்களைத் தடைசெய்தபோது, ​​பாலகங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு புத்துயிர் கொடுத்தார். மகாராஷ்டிராவில் மிக பிரபலமாக கொண்டப்படும் விநாயகர் சதுர்த்தி இன்று உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி வரலாறு

முதன்மை கடவுளாக விளங்கும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுவது தொடர்பாக பல புராண கதைகள் உள்ளன. கஜமுகாசுரனை கொன்றதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்பது ஒரு ஐதீகம்.

உலகமெல்லாம் தோன்றுவதற்கு முன் தோன்றி, உலகில் எல்லா உயிர்களையும் தோற்றுவித்த ஆதியான சிவபெருமானின் அருள் பெற்ற கஜமுகாசுரன் அதாவது தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி கஜமுகாசுரன் வரம் பெற்று இருந்ததால், தான் பெற்ற வரத்தின் வல்லமைகளால் தலைகணம் கொண்டு தேவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்துள்ளான்.

கஜமுகாசுரன் கொடுமையில் இருந்து விடுபட செய்வதறியாமல் தேவர்கள் திணறி வந்த அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவ பெருமானிடம் சரணடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

விநாயகருக்கும், கஜமுகாசரனுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. போரின் முடிவில் எந்த ஆயுதங்களாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று கஜமுகாசுரன் வரம் பெற்றதால் தன்னுடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை சம்ஹாரம் செய்வார். பின்னர் கஜமுகாசுரனை மூஞ்சுறாக மாற்றி தனது வாகனமாக்கிக் கொண்டார் என்பது புராணங்களில் கூறப்படுகிறது. எனவே ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தீராத வினை தீரும் என்பதும், அனைத்து விதமான பாக்கியங்கள் நம்மை வந்து சேரும் என்பதும் ஐதீகம்.

எடப்பாடி பழனிசாமி விநாயகர் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி அனைத்து வளமும் பெற்ற வாழ்த்துக்கள் ..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,” மக்கள் நற்காரியங்களைத் தொடங்கும் போது, தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெற விநாயகப் பெருமானை முதலில் போற்றி வணங்குவர். விநாயகரைத் துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.

வினை தீர்க்கும் தெய்வமான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளாம் விநாயகர் சதுர்த்தியன்று, களி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அவல், பொரி, பழங்கள் போன்ற பொருட்களைப் படைத்து; அருகம்புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து, விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.

வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வேழ முகத்தோனை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டு, அவர் தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று, நோய் நொடி இல்லாப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், உளமார்ந்த ‘விநாயகர் சதுர்த்தி’ வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.