நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகின்றனர். இந்நிலையில், 78-வது சுதந்திர தினத்தில் தேசப் பிரிவினையின் கொடூரங்களை விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழக பள்ளிகளில் நடத்த வேண்டும் என்கிற தமிழக ஆளுநரின் அறிவிப்பு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 78-வது சுதந்திர தினத்தன்று ஆகஸ்ட் -15, தேசப் பிரிவினைகளின் கொடூரங்களை விளக்கும் புகைப்பட கண்காட்சியை நடத்த வேண்டும் என தமிழக ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே. ஆர். நந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாட்டு விடுதலைக்காக நமது முன்னோர்களின் தியாகங்களை மாணவர்களுக்கு நினைவு கூரும் நிகழ்ச்சிகள் மூலமாக மாணவர்களிடம் நமது நாட்டின் சுதந்திர போராட்ட வரலாற்றை கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக, தேச பிரிவினையின் கொடூரங்களை விளக்கும் புகைப்பட கண்காட்சியை மாணவர்களிடம் கொண்டு செல்வது என்பது ஆபத்தானது. அது மாணவர்களிடம் சங்கபரிவாரங்களால் நாடு முழுவதும் அரங்கேற்றப்படும் வெறுப்பை அவர்களிடம் மனதில் விதைக்கும் நிகழ்வாகவே அமையும்.
தேச பிரிவினைக்கு காரணமானவர்கள் யார்? அது ஆர்எஸ்எஸ்-ன் சூழ்ச்சி திட்டத்தில் ஒன்று என்பதை மாணவர்களுக்கு விளக்குவதற்குப் பதிலாக, பிரிவினையின் போது நடந்த கொடூரங்களை மட்டும் கொண்டுசென்று வரலாற்றை மறைத்து பள்ளி மாணவர்களிடம் வெறுப்பை விதைக்கும் பேராபத்தான நிகழ்ச்சியை நடத்துவது ஏற்புடையதல்ல. மாணவர்களின் மனதில் வெறுப்பு சிந்தனைகளை விதைக்கும் வகையிலான தமிழக ஆளுநரின் அறிவிப்பு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் நிஜாம் முகைதீன் தெரிவித்துள்ளார்.