ஜவ்வரிசி பளபளப்பாக இருப்பதற்கு வேதிப்பொருட்கள் கலப்படம் குறித்து ஆய்வு

சென்னை உச்ச மன்றத்தில் நடராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஜவ்வரிசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாக மரவள்ளிக்கிழங்கு நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. ஆனால் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் பல சேகோ பேக்டரிகள், ஜவ்வரிசி பளபளப்பாக இருப்பதற்கு வேதிப்பொருட்கள் பலவற்றைக் கலந்து தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

இதை தடுக்க கோரி உணவு பாதுகாப்பு துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. கடைகளில் விற்பனை செய்யப்படும் 3 வகையான ஜவ்வரிசியை நீதிபதி வாங்கி வந்திருந்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஜவ்வரிசி மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி 9 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று கூறினார். அதையடுத்து, தான் வாங்கி வந்த ஜவ்வரிசி பாக்கெட்டுகளை அரசு வக்கீல் மூலம், மன்றத்தில் ஆஜராகியிருந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் நீதிபதி வழங்கினார்.

உள்ளாட்சித்துறை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தூய்மைப்பணி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வினியோகம், பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு, அலுவலக பணிகள் என்று சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேல் இவற்றில் 75 சதவீதம் பேர் தினக்கூலி வேலை செய்து வருகிறார்கள். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தினக்கூலியாக வேலை செய்துவரும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் சுயஉதவிக்குழு, ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறைகளில் பணியாற்றி வரும் அனைவரையும் நேரடி பணியாளர்களாக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனைவரையும் பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் இருந்து ஆண்-பெண் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குவிந்தனர்.

ஒன்றிய அரசை கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன போராட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் டந்த மாதம் 20-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் – டீசல் – சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பொருளாதார சீரழிவு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தனியார் மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது குறித்தும், பிகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தி.மு.க. தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெற்று கொண்டுள்ளது. அதன்வரிசையில் இன்று ஒன்றிய அரசை கண்டித்து ஈரோடு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக ஜமாபந்தி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக ஜமாபந்தி முகாம் நடந்தது. அதன்படி கொடுமுடியில் நேற்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது.

முகாமில் கிளாம்பாடி வருவாய் கோட்டத்தில் உள்ள புஞ்சை கிளாம்பாடி, நஞ்சை கிளாம்பாடி, ஊஞ்சலூர், கொளத்துப்பாளையம், நஞ்சை கொளாநல்லி, புஞ்சை கொளாநல்லி, பாசூர் ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் கோப்புகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

‘என் தலைமையில் செயல்பட்டிருந்தால் மீண்டும் ஆட்சியை பிடித்திருக்க முடியும்’’

வி. கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த வகையி்ல் ஈரோட்டை சேர்ந்த சிதம்பரம் என்ற தொண்டரிடம் வி. கே. சசிகலா பேசுகையில், கொரோனா தாக்கம் முழுசா ஓயட்டும். கட்டாயம் நான் வந்துருவேன். கட்சியே இப்போ வேற மாதிரி போய்க்கிட்டு இருக்கு. விரைவில் வந்து இந்த கட்சியை காப்பாற்றுவேன்.

அம்மா இருக்கும்போது நம்ம கட்சி நாட்டிலேயே 3-வது பெரிய கட்சினு நமக்கு அந்தஸ்து கிடைச்சது. ஆனா இன்னைக்கு நம்ம எம்.பி.க்களை நாமே இழந்திருக்கிறோம். இருந்த எம்.பி.க்களையும், அவங்களோட தவறான முடிவுகளால் வேற கட்சிக்கு தாரை வார்த்திருக்கிறோம். எந்த பிரச்சினையும் ஏற்படாம என்னோட தலைமையில ஒற்றுமையாக இருந்துருந்தா நிச்சயம் ஆட்சி அமைச்சிருக்கலாம் என வி. கே. சசிகலா தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தினந்தோறும் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முதல் சுழற்சி முறையில் முகாம் அமைத்து மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், தற்போது சுழற்சி முறையில் 20 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடுவது குறித்த முறையான தகவல் இல்லாததால் வழக்கம் போல், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போட நேற்று காலை பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போடும் மையத்தின் முன்பு நேற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் தடுப்பூசிகள் போடப்படாது என்று மாநகராட்சி ஊழியர்கள் கூறியதால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் திடீரென்று ஈரோடு-சத்தி ரோட்டில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.