கொரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தினந்தோறும் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முதல் சுழற்சி முறையில் முகாம் அமைத்து மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், தற்போது சுழற்சி முறையில் 20 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடுவது குறித்த முறையான தகவல் இல்லாததால் வழக்கம் போல், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போட நேற்று காலை பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போடும் மையத்தின் முன்பு நேற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் தடுப்பூசிகள் போடப்படாது என்று மாநகராட்சி ஊழியர்கள் கூறியதால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் திடீரென்று ஈரோடு-சத்தி ரோட்டில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.