சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இடையப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளையன் என்ற முருகேசன் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு ஜெயப்பிரியா, ஜெயப்பிரதா ஆகிய 2 மகள்களும், கவிப்பிரியன் என்ற மகனும் உள்ளனர்.
முருகேசன் இவர் நேற்று முன்தினம் காலை கருமந்துறை பகுதிக்கு நண்பர்கள் சிவன் பாபு, ஜெயசங்கர் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு உறவினர் ஒருவரை பார்த்து விட்டு மாலையில் அவர்கள் திரும்பி உள்ளனர்.
வழியில் பாப்பிநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச்சாவடி அருகே காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் மீது காவல் துறையினர் லத்தியால் தாக்கியுள்ளனர்.
அப்போது இடையப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்ற விவசாயக் கூலியை காவல்துறையினர் தள்ளிவிட்டதில், அதில் கீழே விழுந்து பின்மண்டையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வாழைப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவச் சிகிச்சைக்காக முருகேசன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக முருகேசன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.