வெறும் 21 கிலோமீட்டர் பயணத்திற்கு 1000 ரூபாய் வசூலித்த ரேபிடோ ஓட்டுனர்..!

சென்னையிலுள்ள ஒரு ரேபிடோ பயணி, வெறும் 21 கிலோமீட்டர் பயணத்திற்கு 1000 ரூபாய் வசூலித்த ரேபிடோ ஓட்டுனர் இரட்டிப்பு கட்டணம் வசூலித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ்வே என அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் துரைப்பாக்கத்தில் AJ ஸ்கில் டெவலப்மென்ட் அகாடமி செயல்பட்டு வருகின்றது. இதன் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான அசோக் ராஜ் ராஜேந்திரன் இருக்கிறார்.

அசோக் ராஜ் ராஜேந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 21 கி.மீ தொலைவிலுள்ள துரைப்பாக்கம் வரை செல்ல ரேபிடோ முன்பதிவு செய்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து துரைப்பாக்கம் வரை செல்ல ரேபிடோ ஆப்பில் கட்டணம் ரூ.350 ஆக காட்டியுள்ளது. இதனை நம்பி ரேபிடோவில் பயணம் செய்துள்ளார். அதன்பின்னர், அசோக் ராஜ் ராஜேந்திரன் துரைப்பாக்கத்தில் AJ ஸ்கில் டெவலப்மென்ட் அகாடமி இறங்கியுள்ளார். அப்போது, ரேபிடோ ஓட்டுநர் ரூ.1,000 கேட்டதாக தெரிய வருகிறது. இந்த சம்பவம் குறித்து, அசோக் ராஜ் ராஜேந்திரன் ரேபிடோவிற்கு புகார் தெரிவித்துள்ளார். ஆனால் ரேபிடோ அந்த சாட்டை எந்த வித பதிலும் இன்றி முடித்து விட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அதிகமாக கட்டணம் கேட்டதற்கு ரேபிடோ ஓட்டுநர் அந்த பகுதியில் நீர் தேங்கி இருப்பதை காரணம் காட்டி 1000 கேட்க, ராஜேந்திரன் ஒரு வழியாக பேரம் பேசி 800 ரூபாயாக குறைத்துள்ளார் என தனது லிங்க்டின் பதிவில் ராஜேந்திரன் எழுதியுள்ளார். ரேப்பிடோ வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு பேசிய சாட் ஸ்கிரீன்ஷாட்டை ராஜேந்திரன் பகிர்ந்திருந்தார். அதில் இறங்கிய இடத்தில் முரண்பாடு இருப்பதாக ரைட் ஹைலிங் ஆப்-பில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. ராஜேந்திரன் வித்தியாசம் வெறும் 100 மீட்டர் தூரம் மட்டுமே என்றும், 100 மீட்டருக்கு 100 சதவீத கூடுதல் கட்டணமா? என்றும் அந்த கஸ்டமர் சர்வீஸ் அதிகாரியிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலாக இறங்கிய இடத்தில் முரண்பாடு இருப்பதாக கூறி கஸ்டமர் சர்வீஸ் அதிகாரி சாட்டை முடித்து விட்டார்.

40 பயணிகளை காப்பாற்றி இறந்த பேருந்து ஓட்டுநர்..!

ஆந்திராவில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. எனினும் பேருந்தை ஒரு வயலில் இறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றி, அரசு பேருந்து ஓட்டுநர் மரண மடைந்தார்.

ஆந்திர மாநிலம், குண்டூர் அடுத்துள்ள பாபட்லா பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சாம்பசிவ ராவ். இவர் வழக்கம்போல் நேற்று காலை ரேபல்ல எனும் ஊரில் இருந்து சீராலா எனும் ஊருக்கு சுமார் 40 பயணிகளுடன் பேருந்து புறப்பட்டது.

இந்நிலையில் வழியில் சாம்பசிவ ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே பேருந்தை நிதானமாக சாலை ஓரத்தில் நிறுத்த முயன்றார். ஆனால் பேருந்து அருகில் உள்ள வயலில் இறங்கி நின்றது. இதையடுத்து பேருந்தின் ஸ்டீரிங் மீது கவிழ்ந்து சாம்பசிவ ராவ் உயிரிழந்தார். இதற்கிடையில் பேருந்தில் இருந்த 40 பயணிகளும் காயமின்றி தப்பினர். தங்கள் உயிரை காப்பாற்றிய சாம்பசிவ ராவுக்கு அவர்கள் நன்றிப் பெருக்குடன் அஞ்சலி செலுத்தினர்.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சாதுரியமாக பேருந்தை ஓட்டி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்..!

கோவை – திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலைக்கும், மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற ASM என்ற தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. அந்த ASM என்ற தனியார் பேருந்தை தொண்டாமுத்தூரை சேர்ந்த ஓட்டுநர் சுரேந்திரன் என்பவர் அன்று ஓட்டி வந்தார். அந்த பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்தனர்.

திருப்பூர் அவிநாசி தேசிய நெடுந்சாலையில் பேருந்து செல்லும் போது, காற்று பலமாக வீசியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது ஓட்டுநர் சுரேந்திரன் மீது கண்ணாடி துண்டுகள் தலை, கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் பட்டு காயம் ஏற்பட்டது.

இதனை சுதாரித்துக்கொண்ட சுரேந்திரன், பயணிகளின் உயிரை பாதுகாக்க தனக்கு ஏற்பட்ட படுகாயங்களை பொருட்படுத்தாமல் பேருந்தை லாவகமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவத்தை கண்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவரை பாராட்டி, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில் பேருந்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் கண்ணாடிகள் நொறுங்கி விழும் காட்சிகளும், ஓட்டுநர் சுரேந்திரன் ரத்தக்காயத்துடன் பேருந்தை இயக்கி, பயணிகளை காப்பாற்றிய காட்சிகளும் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்..!

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்ததாத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியிலிருந்து நாகர்கோவில் வடசேரியை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அழகப்பபுரம் பகுதியில் சென்றபோது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் பேருந்தை நிறுத்தும்படி கை காட்டினர். ஆனால் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் காரில் சென்று பேருந்தை நிறுத்தினர். பின் பேருந்து ஓட்டுனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தற்போது ஓட்டுநனரிடம் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனடிப்படையில், அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்டிபன், நடத்துனர் மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.