ஆல்பா போயி பீட்டா வந்து காமா.. டெல்டா…டெல்டா பிளஸ் என தொடர்ந்து AY 4.2 -க்கு உருமாற்றம்

வைரஸ் கிருமிகள் தங்கள் புறச்சூழலை பொறுத்து உருமாற்றம் அடையும் தன்மையை கொண்டவை ஆனால் சிலவகை வைரஸ் கிருமிகள் உருமாற்றங்கள் அந்த கிருமியை பலமிழக்கச் செய்துவிடும். மேலும் ஆனால் வைரஸ் கிருமிகள் உருமாற்றமானது அந்த கிருமியின் வீரியத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமையும் தன்மைகொண்டது.

அதன் வரிசையில் சீனாவில் கடந்த 2019 -ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் கிருமியானது, தற்போது வரை பல்வேறு நாடுகளில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.

இந்நிலையில் டெல்டா வகை கொரோனாவின் துணைப் பரம்பரையைச் சேர்ந்ததாக கண்டறியப்பட்டுள்ள AY 4.2 என்ற கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் பரவியது கண்டறியப்பட்டது. இந்த வகை கொரோன பாதிப்பு இந்தியாவிலும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த AY 4.2 கொரோனா வகையானது, வேகமாக பரவும் தன்மை உடையது என்று ஐ.சி.எம்.ஆர். விஞ்ஞானி டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பெண் ஒருவருக்கு ‘டெல்டா பிளஸ்’

இந்தியா முழுவதும் ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களிடம் பல்கி பெருகும்போது வைரஸ் கிருமி தன்னை காத்துக்கொள்ள உருமாற்றம் அடைய தொடங்கும். அவ்வாறு உருமாற்றமடைந்த வைரஸ்கள் ஏற்கனவே உள்ள வைரசை காட்டிலும், வீரியமிக்கதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த அந்த வைரசை ‘டெல்டா’ வகை கொரோனா என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக அதிலிருந்தும் உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ‘டெல்டா பிளஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2-வது அலை ஏற்பட்டபோது தமிழகம், மராட்டியம், உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதையடுத்து வைரசின் மரபணுவை ஆய்வு செய்து தமிழகத்தில் எந்த வகையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய தமிழக பொது சுகாதாரத்துறை திட்டமிட்டது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 1,159 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வைரஸ் மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் இதுவரை 772 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகி, அதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு ‘டெல்டா’ வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

குறைந்த மாதிரிகளில் மட்டுமே ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் காணப்பட்டது. இந்நிலையில் முடிவுகள் வெளியான 772 மாதிரிகளில் அதிர்ச்சி தரும் தகவலாக பெண் ஒருவருக்கு ‘டெல்டா பிளஸ்’ பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவரது சளி மாதிரி அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திலிருந்து பெறப்பட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.