சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த தேவராஜன். கிழங்கு மில் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் உலிபுரம் சேர்ந்த தம்மம்பட்டியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் சாந்தகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷேர் மார்க்கெட் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என தேவராஜனிடம் சாந்தகுமார் கூறி வந்தார். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நான் பொறுப்பு என ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பிய அவர், 2021-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் வரை பல தவணைகளில் ரூ.65 லட்சத்து 78ஆயிரத்து 499 ரூபாயை சாந்தகுமாரிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஷேர் மார்க்கெட் தொழில் தொடர்பாக மும்பைக்கு பயிற்சிக்காக செல்வதாக கூறி ரூ.1 லட்சத்தை தேவராஜனிடம் வாங்கி சென்றார். அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. அதிர்ச்சியடைந்த தேவராஜன், சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். தொடர் விசாரணையில் 15 பேரிடம் சாந்தகுமார், 5 கோடியே 26 லட்சத்து 70ஆயிரத்து 899 ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளமுருகன் மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி, நேற்று சாந்தகுமாரை அதிரடியாக கைது செய்தனர்.