நிர்வாண வீடியோ வெளியிடுவதாக கூறி மிரட்டும் நாதக நிர்வாகி மீது சைபர் கிரைமில் புகார்..!

நிர்வாண புகைப்படம், வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக பெண்ணை மிரட்டிய நாதக நிர்வாகி மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைமில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த பெண் திருச்சி மாவட்ட சைபர் கிரைமில் அளித்துள்ள புகாரில் நான் பி.எஸ்சி பட்டதாரி. விவாகரத்துக்குபின் திருச்சி, வயலுார் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் வரவேற்பாளராக 2017 முதல் 2019 வரை வேலை செய்தேன்.

அப்போது மேலாளராக இருந்தவரின் உறவினரான நாதக நிர்வாகி இலங்கை தமிழர் இளங்கோ அங்கு வந்து என்னுடன் அறிமுகமானார். லண்டனில் சூப்பர் மார்க்கெட் துவங்கவுள்ளதாகவும், அதற்கு திருச்சியில் இருந்து மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அனுப்பி வைக்குமாறும் கூறி மாதம் ரூ.20 ஆயிரம் கொடுத்தார். பின்னர் துபாயில் என் பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குவதாகவும், அதற்கு உரிமம் பெற என்னை துபாய் அழைத்தார்.

அதற்காக 2 நாட்கள் நான் துபாய் சென்றபோது நான் ஆடை மாற்றுவதையும், குளிப்பதையும் எனக்கு தெரியாமல் இளங்கோ புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில் எனக்கும் ஈரோட்டை சேர்ந்த வாலிபருக்கும் மறுமணம் நடந்தது. கணவரை விட்டு லண்டனுக்கு வந்து விடு, இல்லாவிட்டால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டினார்.

இதனால் நான் கடந்த 21.7.2024 ல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன். ஆனால், இரண்டாவது கணவர் காப்பாற்றி விட்டார். இளங்கோ தொடர்ந்து என் அந்தரங்க புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி வருகிறார் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின்பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் நாதக நிர்வாகி இளங்கோ மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைபர் கிரைம்: தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் 91,161 பேரிடம் ரூ.1,116 கோடி மோசடி..!

ஆன்லைன் மூலம் தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களில் 91,161 பேரிடம் ரூ.1,116 கோடியை சைபர் குற்றவாளிகள் மோசடி செய்துள்ளனர். மாநில சைபர் கிரைம் முயற்சியால் மோசடி நபர்களிடம் இருந்து ரூ.526 கோடி முடக்கக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சைபர் கிரைம் மூலம் இணைய நிதி மோசடிகள், கிரிப்டோகரன்சி மோசடிகள் என ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் 30 வரையிலான 9 மாதங்களில் 91 ஆயிரத்து 161 பேரிடம் சிபிஐயில் இருந்து பேசுவதாகவும், கிரிப்டோகரன்சி என பல்வேறு ஆன்லைன் மோசடிகள் மூலம் 1,116 கோடியை சைபர் குற்றவாளிகள் பறித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில சைபர் கிரைம் பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம், சைபர் குற்றவாளிகளின் வங்கி கணக்கில் உள்ள ரூ.526 கோடி முடக்கக்கப்பட்டுள்ளது. மேலும், மோசடி நபர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடந்த 9 மாதங்களில் ரூ.48 கோடி திரும்ப பெற்று தரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஆன்லைன் மோசடி நபர்களிடம் ஏமாறக் கூடாது. பொதுவாக ஆன்லைனில் யாரையும் கைது செய்ய முடியாது.

எனவே நீங்கள் கைது செய்யப்பட இருப்பதாக யாராவது தொலைபேசி மூலம் கூறினால் தயவு செய்து பீதி அடைய வேண்டாம். பணம் செலுத்த வேண்டாம். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தெரியாத குழுக்களில் சேர வேண்டாம். அப்படி யாரேனும் மோசடி செய்தால் உடனே சைபர் ஹெல்ப் லைன் எண் 1930 தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாநில சைபர் கிரைம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உஷாரய்யா…! உஷார்…! தொடரும் ஆன்லைனில் பகுதிநேர வேலை மோசடி …. 7½ லட்சம் இழந்த பெண்..!

கோயம்புத்தூர் சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகரை சேர்ந்த ஸ்ரீமுருகன், இவரது மனைவி பிரியாலட்சுமி சமீபத்தில் இவரது செல்போனில் உள்ள டெலிகிராம் செயலிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதில் இருந்த லிங்க்-ஐ கிளிக் செய்து பிரியாலட்சுமி தனது விவரங்களை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை திரிஷா என அறிமுகப்படுத்தி கொண்டார்.

அவர் ஒரு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளது எனவும், அந்த கம்பெனி இணையதளத்திற்கு சென்று ரிவ்யூ கொடுத்தால் அதிகளவு கமிஷன் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். மேலும் தாங்கள் கொடுக்கும் பணிகளை ஆன்லைனில் முடித்து கொடுத்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்தார். திரிஷா கூறியதை நம்பிய பிரியாலட்சுமி ஆன்லைன் மூலம் அவர்கள் கொடுத்த பணிகளை முடித்து கொடுத்தார்.

இதையடுத்து அவருக்கு கமிஷனாக ரூ.1,500 கிடைத்தது. இதையடுத்து மீண்டும் பிரியாலட்சுமியை தொடர்பு கொண்ட, திரிஷா தாங்கள் கூறும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி, ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்தால் கூடுதல் கமிஷன் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் கூறிய வங்கி கணக்கிற்கு பிரியாலட்சுமி ரூ.10 ஆயிரம் முதலீடாக செலுத்தினார். இதற்கு பிரியாலட்சுமிக்கு ரூ.13,407 கமிஷனாக கிடைத்தது. மற்றொரு பணிக்கு ரூ.11,706 கமிஷனாக கிடைத்தது. இதையடுத்து பிரீமியம் முறையில் பணம் செலுத்தினால் இதை விட அதிக கமிஷன் தொகை கிடைக்கும் என்று பிரியாலட்சுமிக்கு அந்த மர்ம பெண் திரிஷா ஆசை வார்த்தை கூறினார்.

இதனை நம்பிய பிரியாலட்சுமி, பல்வேறு கட்டங்களாக திரிஷா கூறிய வங்கி கணக்கு எண்ணிற்கு ரூ.7 லட்சத்து 61 ஆயிரம் பணத்தை செலுத்தினார். அதன்பின்னர் பிரியாலட்சுமி கமிஷன் தொகை கிடைக்கவில்லை. மேலும் திரிஷாவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியாலட்சுமி இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.