மின் திருட்டு கண்டுகொள்ளாத மின்வாரிய அதிகாரிகள்..!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதி கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இருப்பு ஊராட்சி ஆர்.சி கோவிலாங்குப்பம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் தொடர்ந்து மின் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகள் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின் கட்டணம் செலுத்தி வரும் பயனாளிகள் தங்கள் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை தவறான முறையில் கட்டுமான பணிக்கு செலுத்தப்படும் கட்டணங்களை செலுத்தாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தில் உபயோகித்து வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு இதனை தடுக்க வேண்டிய மின்வாரிய அதிகாரிகள் பலமுறை புகார் எழுந்தும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதனை இயக்குதல் மற்றும் பராமரித்தல் மின்வாரிய அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இப்பகுதியில் மின்வாரிய அதிகாரிகளால் மாதம்தோறும் நடத்தப்படும் மின் திருட்டை தடுக்கும் வெகுஜன சோதனை (mass raid) நடைபெறவில்லையா? அல்லது அப்பகுதியில் பணி மேற்கொண்டு வரும் மின் ஊழியர் மற்றும் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு இதனை கண்டு கொள்ளவில்லையா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே தமிழ்நாடு மின்சார வாரியம்  இதன் மீது கவனம் கூர்ந்து தவறான முறையில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை கட்டிடப் பணிக்கு பயன்படுத்தி வரும் நபர்கள் மீதும் மின் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

மழையின் காரணமாக சாலையில் விழுந்த புளியமரத்தை உடனே அகற்றிய வடலூர் காவல்துறையினர்

கடலூர் மாவட்டம் வடலூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நெத்தனாங்குப்பம் ரோடு பிரிவு அருகில் கனமழை காரணமாக புளியமரம் ஒன்று ரோடு பகுதியில் விழுந்தது அதனை உடனே வடலூர் காவல் ஆய்வாளர் வீரமணி அவர்கள் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர்கள் சக்திவேல்,K. வெங்கடேசன், S. வெங்கடேசன் மற்றும் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடனே அகற்றப்பட்டது வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்படும் முன் துரிதமாக செயல்பட்ட குறிஞ்சிப்பாடி தீயணைப்பு வீரர்களும் வடலூர் காவல்துறையினர் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்

ரகசிய இடத்தில் வைத்து விசாரணை: எடப்பாடி உதவியாளர் மீது வழக்கு: தோண்ட தோண்ட பல்வேறு முறைகேடுகள்

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற என்ஜினீயர் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த மணி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்து வருகிறார்.

நண்பர் ஒருவர் மூலம் மணி எனக்கு அறிமுகமானார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரை அணுகி அரசு வேலை வாங்கி தரும்படி கூறினேன். அப்போது அவர் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி அவரிடம் ரூ.17 லட்சம் கொடுத்தேன். பணம் பெற்று வருடக்கணக்கில் ஆகியும் அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரிடம் அரசு வேலை வேண்டாம். கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன்.

ஆனால் அவர் கொடுக்க மறுத்து வருகிறார். மேலும் அவர் மிரட்டல் விடுக்கிறார். எனவே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்து ஏமாற்றிய மணி மற்றும் புரோக்கராக செயல்பட்ட அவரது கூட்டாளி செல்வகுமார் ஆகிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து குற்றப்பிரிவு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி, புரோக்கராக செயல்பட்ட செல்வகுமார் ஆகியோர் பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மணி மற்றும் செல்வகுமார் ஆகிய 2 பேர் மீது மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் மணி மற்றும் செல்வகுமார் ஆகிய 2 பேரையும் காவல்துறை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.இதில், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த 25 பேரிடம் ரூ.1 கோடியே 17 லட்சம் பெற்று, மோசடி செய்த மணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிலர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவிடம் புகார் கொடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.