திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அவசர கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் யாகப்பன் முன்னிலை வகிக்க, தலைவர் ரெஜினா நாயகம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முனியாண்டி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு 2020-2021-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் 15-வது நிதிக்குழு மூலம் ரூ.1 கோடியே 26 லட்சம் ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கூட்டத்தை முடித்துக்கொள்ளலாமா? என்று தலைவர் கேட்க துணை தலைவர் யாகப்பன், அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் சிலர் வேறு கட்சியில் இணைய உள்ளதாக தெரிகிறது. அப்படி இணைய முடிவு செய்தால் அவர்கள் தங்களின் தற்போதைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்றார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் துணை தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த நாற்காலியை பாலமுருகன் எடுத்து கீழே வீசினார்.
இதற்கிடையே அங்கு வந்த மற்ற கவுன்சிலர்கள், துணை தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. அப்போது தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சின்னமாயன் என்ற அறிவழகன் தலைமையில் கவுன்சிலர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது குறித்து தகவலறிந்த நிலக்கோட்டை காவல்துறை விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.