அருணாசலேஸ்வரர் கோவிலில் தற்காலிக பணியில் முறைகேடா..!?

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த தாய், மகன் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அவர்களை மீட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை கோபுரத் தெருவை சேர்ந்த ஆண்டாள் அம்மாள் மற்றும் அவரது மகன் வெங்கடேசன் என்பது தெரியவந்தது.

மேலும் வெங்கடேசன் கூறுகையில், 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் தற்காலிமாக பணியாற்றி வந்தேன். அந்த சமயத்தில் எனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதையடுத்து 5 நாட்கள் விடுமுறையில் சென்றேன். பின்னர் வேலைக்கு வரும் போது என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவில் இணை ஆணையரை சந்திக்க சென்ற போது என்னை சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்திவிட்டனர். இந்நிலையில் எனது தற்காலிக பணியில் முறைகேடாக வேறு ஒரு நபரை பணியில் அமர்த்தி உள்ளனர். எனவே நான் பார்த்து வந்த வேலையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

வியாபாரிகள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகள் வைக்க அனுமதி கேட்டு வியாபாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் 60-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஊட்டியில் 5 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் கோத்தகிரி, பந்தலூர் , குன்னூர், கூடலூரில் பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்படாததால் வியாபாரிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் வியாபாரிகள் வாங்கிய பட்டாசுகளை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதால் தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்களே உள்ள நிலையில் நேற்று இரவு பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக்கோரி ஊட்டி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.