தந்தையை இழந்த பார்வை குறைபாடு உள்ள தாயின் பராமரிப்பில் வளர்ந்த பழங்குடி மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி

இந்தியா முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த நீட் தேர்வில், கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள எம். நஞ்சப்பனூர் என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் மகள் சங்கவி. முனியப்பன் இறந்து விட்ட நிலையில் தாயார் வசந்தாமணி கண் பார்வை குறைபாடுள்ளவர்.

இந்த நீட் தேர்வில், தந்தையை இழந்த பார்வை குறைபாடு உள்ள தாயாருடன் இருந்து வரும் கோயம்புத்தூர் மாணவி மலசர் பழங்குடியை சேர்த்தவர். பழங்குடியின மாணவ, மாணவிகள் 108 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தகுதி பெற்ற நிலையில் மாணவி சங்கவி, நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 202 மதிப்பெண்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகள் வரைந்த ஓவியம் அமெரிக்க கண்காட்சிக்கு தேர்வு

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த கல்கி சுப்பிரமணியம் என்ற திருநங்கை கவிதை, ஓவியம் சிறந்த பேச்சாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர். திருநங்கைகளின் திறமைகளை உலகம் அறியவும், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த கலை மற்றும் ஓவிய பயிற்சியை கடந்த 5 ஆண்டுகளாக அளித்து வருகிறேன்.

மேலும் சகோதரி என்ற அறக்கட்டளை நிறுவி பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு சேவை செய்து வரும் இவர் சிறந்த சமூக செயற்பாட்டாளருக்கான பல விருதுகளை பெற்று உள்ளார். இந்நிலையில் அமெரிக்க நாட்டில் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஓவியக் கண்காட்சியில் உலகம் முழுவதிலும் உள்ள திருநங்கைகள் வரைந்த ஓவியங்கள் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் 20- ந்தேதி வரை 6 மாதம் நடைபெறுகிறது. இதில் 7 திருநங்கைகள், ஒரு திருநம்பி உட்பட 8 பேரின் ஓவியங்கள் இடம் பெறுகின்றது.

11-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! மாணவன் போக்சோ சட்டத்தில் கைது..!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அடுத்த கப்பலங்கரை பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி அதே பகுதியில் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் 15 வயதான மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்த பொள்ளாச்சி தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவனுடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவன், மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அந்த மாணவி வீட்டிற்குச் சென்று உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது, இதையடுத்து மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதில் அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அந்த மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

UBL தொழிற்சாலையின் சாயக்கழிவு நீரை நேரடியாக ஆற்றில் கலப்பதை ஆதாரத்துடன் வெளி கொண்டு வந்த சமூக ஆர்வலர்… பொதுப்பணித்துறை அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா…?

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் UBL நிறுவனம் தனது சாயக்கழிவு நீரை நேரடியாக ஆற்றில் கலப்பதாக பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், 2050 -ஆம் ஆண்டில் திருப்பூர் மாநகராட்சியின் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் என்பதால், மக்கள் தொகைக்கு தேவையான குடிநீர் தேவையை ஈடு செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டு 2015-16-ம் ஆண்டு அம்ரூத் திட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஓராண்டிற்கு மேலாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு 4-வது குடிநீர் திட்ட பெரிய குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் மேட்டுப்பாளையம் UBL தொழிற்சாலை அருகே இன்று மதியம் 1.30 மணியளவில் தோண்டப்படும் இடத்தில் கருப்பு நிறத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.

அதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்வாகம் பொதுமக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக குழாய்கள் பதிக்காமலேயே உடனடியாக மூடும் பணியில் ஈடுபட்டனர். அங்கு வந்த சமூக ஆர்வலர்கள் UBL தொழிற்சாலையின் சாயக்கழிவு நீரை நேரடியாக ஆற்றில் கலப்பதை ஆதாரத்துடன் வெளி உலகிற்கு கொண்டு வந்தனர். இனியாவது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா…?

அதிக கட்டணம் வசூலித்த எதிரொலி கொரோனா ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் விதிகளை மீறி செயல்படும் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் ஆகியோர் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் ஆய்வு நடத்த உத்தரவிட்டனர்.

அப்போது பொள்ளாச்சியில் ஊத்துக்காடு ரோடு, பாலகோபாலபுரம் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும், மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றாமல் இருப்பது தெரியவந்தது. மேலும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு அரசு ரூ.900 கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது.

ஆனால் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக ரூ.1200 முதல் ரூ.1900 வரை கட்டணம் வசூலித்து உள்ளனர். எனவே 2 ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

வால்பாறையில் தடுப்பூசி பற்றாக்குறை பொதுமக்கள் வாக்குவாதம்

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, முடீஸ், சோலையார் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அந்தந்த எஸ்டேட் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இறுதியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காத்து நிற்கும்போது பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. உடனே அங்கு காத்திருந்த பொதுமக்கள் ஏன் தடுப்பூசி போடவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டனர்.

அதற்கு அவர்கள், குறைந்தளவில் மட்டுமே தடுப்பூசி வந்ததாகவும், அது தீர்ந்து விட்ட தால் வந்த பின்னர் போடப்படும் என்றும் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

1 கிலோ 350 கிராம் கஞ்சாவுடன் பெண் கைது

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை காமராஜ் நகர் குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஷ்வரி மற்றும் காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில் அந்தப்பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு 1 கிலோ 350 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காவல்துறைக்கு முத்துலட்சுமியை கைது செய்ததுடன், அவருடைய வீட்டில் இருந்த கஞ்சா மற்றும் ரூ.71 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் வாக்குவாதம்

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை உள்பட 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு வந்த ஆசிரியர்கள் நீண்ட வரிசையில் தடுப்பூசி போடுவதற்கு காத்திருந்தனர்.

அப்போது ஆசிரியர்கள் இல்லாத நபர்களை வரிசையில் நிற்க வைக்காமல், உள்ளே அனுமதித்து தடுப்பூசி போட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கிணத்துக்கடவு சட்டமன்ற அலுவலகம் பூஜை செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

கோயம்புத்தூர் மாவட்டம், குறிச்சி காந்தி நகரில் உள்ள கிணத்துக்கடவு சட்டமன்ற அலுவலகம் பூஜை செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் குறிச்சி மணிமாறன், அ.தி.மு.க மதுக்கரை பேரூராட்சி செயலாளர் சண்முகராஜா, போத்தனூர் பகுதி செயலாளர் டிவிசன் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.