கடனை தாமதமாக கட்டியதால் 7 வீடுகளை பூட்டி மின் இணைப்பை துண்டித்த சோழமண்டலம் பைனான்ஸ் அடாவடி..!

கடனை தாமதமாக கட்டியதால் வீடுகளை பூட்டி மின் இணைப்பை துண்டித்த சோழ மண்டலம் பைனான்ஸ் அடாவடியால் மனமுடைந்து வீட்டின் உரிமையாளர் எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்கடன், வீடு அடமானக்கடன் வாங்குவோர் ஒரு முறைக்கு பல முறை யோசித்து கடன் வாங்குவது நல்லது. கடனை திரும்ப கட்டும் அளவிற்கு வேலை நிரந்தரமாக இருக்குமா என்பதை உறுதி செய்த பின்னரே கடன் வாங்குங்கள். கடனை கட்ட முடியாத சூழல் வந்தால், உங்களிடம் நிலம், தங்கம், சேமிப்பு ஏதாவது இருந்தால் தப்பிப்பீர்கள்.. இல்லை என்றால் நெருக்கடியில் தப்பிக்க முடியாமல் திணற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

ஏனெனில் கடனை வசூலிக்க தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள் கந்து வட்டிக்காரர்களை போல் நடந்து கொள்வது அதிகரித்துவிட்டது. சேலத்தில் நேற்று கடன் தொகையை வசூலிக்க தனியார் வங்கி நடந்து கொண்ட விதம் விவசாயியின் வாழ்க்கையையே முடித்துவிட்டது. கடன் தவணையை செலுத்த ஒருவர் தவறினால், அவருக்கு முறைப்படி அறிவிக்கை அனுப்பி அவரிடம் விளக்கம் பெற வேண்டும்; அவர் கடனை செலுத்த போதிய காலக்கெடு வழங்க வேண்டும்;

அதன்பிறகும் அவர் கடனை செலுத்தவில்லை என்றால் மட்டும் தான் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மதிக்காத தனியார் வங்கிகள் கந்துவட்டிக்காரர்களைப் போல நடந்து கொள்வது தொடர்கிறது.

இந்நிலையில் திருப்பூர் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஏ நகரில் சயன் என்பவர் தனது மனைவி கீதா என்பவருடன் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள சோழ மண்டலம் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை விரிவுபடுத்தபத்திரத்தை அடமானம் வைத்து ரூ.43 லட்சம் கடன் பெற்று கூடுதலாக 6 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சயன் உடல் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் அவரால் கடனை செலுத்த முடியவில்லை. சென்னையில் இருந்து திரும்பிய சயன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 4 மாத கடன் தொகையை செலுத்தி இருக்கிறார். ஆனால் அந்தத் தொகை செயலாக்க கட்டணத்திற்கு சரியாகிவிட்டதாக கூறி நேற்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் எனக் கூறி 30 பேர் சயன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள், சயன் வீடு மற்றும் அவர் வாடகைக்கு விட்டிருந்த 6 வீடுகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி மின் இணைப்பையும் துண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த சயனின் மனைவி கீதா எலி மருந்தை குடித்து உயிரைவிட முயற்சிக்க , அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.