சிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சத்துடன் விருது விண்ணப்பிக்க சென்னை ஆட்சியர் அறிவுறுத்தல்..!

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட, 2024-25-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாகப் பங்காற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் மாநில அரசின் விருது வழங்குவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைகள் திருமணத்தைத் தடுக்கவும், பெண் கல்விக்கு பாடுபட்ட, வீர தீர செயல் புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ல் பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், காவல் துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனம் தகுதியுடைய 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைக் கண்டறிந்து, பரிந்துரை செய்து சென்னை ஆட்சியர் அலுவலகத்துக்கு குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்விருதுக்கு http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கையேடு தயாரிப்பு குறித்த விளக்கம் மற்றும் படிவத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அக்டோபர் 3-ஆம் தேதி 4மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிக்கையில் தெரிவித்துள்ளார்.