தண்ணீர் டேங்கர் லாரி மோதி மாணவி உயிரிழப்பு எதிரொலி …! 16 ஆழ்துளை கிணறுகள், 34 மின் இணைப்புகள் துண்டிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பிரின்ஸ் ஸ்ரீவாரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 5 -ம் வகுப்பு மாணவி லியோரா ஸ்ரீ மீது தாயின் கண்ணெதிரே தண்ணீர் லாரி ஏறி இறங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று தமிழகத்தையே உலுக்கி எடுத்துள்ளது.

 

இந்நிலையில் பிரின்ஸ் ஸ்ரீவாரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி லியோரா ஸ்ரீ பலியானதை தொடர்ந்து விபத்து நடந்த இடம் மற்றும் கீழ்க்கட்டளை ஏரியையொட்டி தண்ணீர் எடுத்து செல்லும் லாரிகள் நிற்கும் இடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ள மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஆட்சியர், மாணவியின் தாயார், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் மேடவாக்கம் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. எனவே பணிகள் முடிவடைந்துள்ள இடங்களின் நடுவில் தடுப்புகள் அமைத்து இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்திடுமாறு காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவுறுத்தினார். மேலும் கீழ்க்கட்டளை ஏரியையொட்டி நன்மங்கலம் ஏரி, கிணறுகளில் முறைகேடாக தண்ணீர் எடுக்கப்பட்டு சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதை தடுக்க முறையற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின் இணைப்புகளை துண்டிக்குமாறும் ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

அதன்படி அப்பகுதியில் உள்ள முறையற்ற 16 ஆழ்துளை கிணறுகள் மற்றும் 34 மின் இணைப்புகளை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மேற்பார்வையில் துண்டிக்கப்பட்டது. அத்துடன் தண்ணீர் லாரி மற்றும் இதர லாரிகள் செல்வதற்கான நேரம் முறைப்படுத்தப்படும் எனவும் ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்தார்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகையை பெற ரூ.1,800 லஞ்சம் வாங்கிய பெண் கைது ..!

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலருக்கு விண்ணப்பித்து இருந்தார்.

இது தொடர்பாக சமூக நல அலுவலர் கஸ்தூரியை நேரில் சந்தித்து விண்ணப்ப நிலை குறித்து கேட்டார். அப்போது கஸ்தூரி ரூ.2 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படும் என்று சுப்பிரமணியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர், ரூ.1,800 தருகிறேன் என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுபற்றி செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கூறினார். செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை சுப்பிரமணியிடம் ரசாயனம் தடவிய 1,800 ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலர் கஸ்தூரியிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா உட்பட 50 ஏக்கர் நிலம் முடக்கம்

2017-ஆம் ஆண்டு சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்திய போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது. கடந்த 2019-ல் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கியது.

மேலும் நிலையில் 2020-ஆம் ஆண்டு, கோடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துக்கள் முடக்கியது. இதன் தொடர்ச்சியாக தற்போது செங்கல்பட்டு மாவட்டம் பையனூரிலுள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள  பங்களா உட்பட 50 ஏக்கர் நிலம்  முடக்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.