அரசு பணிக்கு போலி ஆணை வழங்கி ரூ.1.47 கோடி மோசடி செய்த காவல் ஆய்வாளர்..!

அரசு வேலைக்கு போலி பணி நியமன ஆணை வழங்கி 27 பேரிடம் ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் மீது புகார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக ஏசு ராஜசேகரன், கடந்த 8 மாதமாக பணியில் உள்ளார். இவர், கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியபோது வேலை வாங்கி தருவதாகவும், போலி பணி நியமன ஆணைகளை கொடுத்தும் 27 பேரிடம் ரூ.1 கோடியே 47 லட்சம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து ஏசு ராஜசேகரன் மற்றும் அவரது மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்ட கனகதுர்கா ஆகியோர் மீது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்த லலிதா நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், எனது மகன் விஷாலுக்கு அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் பணியை பெற்றுத்தருவதாகவும், 50 பேருக்கு இளநிலை உதவியாளர் வேலையும், 10 பேருக்கு ஆசிரியர் வேலையும் உள்ளதாகவும் தெரிவித்தார். இதை நம்பி 3 பேருக்கு அரசு வேலை வாங்க ரூ.8 லட்சம் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன்.

எங்களுக்கு பணி நியமன ஆணை வந்தது. இதை நம்பி 27 ஏழை, எளிய மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என நினைத்து ரூ.1.47 கோடியை ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் வங்கி கணக்கிற்கும் அனுப்பி வைத்தேன். 27 பேருக்கும் பணி ஆணை கிடைத்தது. அதன் பிறகு மேலும் ரூ.14 லட்சம் கொடுத்து விட்டு வேலையில் சேர்வதாக கூறி சென்றோம். அதன் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பணி ஆணையை அரசு அதிகாரியிடம் கொடுத்து கேட்ட போது அது போலியானது என தெரியவந்தது.

எனவே ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இத்தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து மருத்துவ விடுப்பில் சென்ற ஆய்வாளர் ஏசு ராஜசேகரன், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திடம் ஆஜரானதாகவும், இந்த மோசடி புகாருக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என எழுதிக் கொடுத்ததாகவும் தெரிய வருகிறது.