ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்திய டிஐஜி ராஜலட்சுமி உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு..!

சிறைத்துறை விதிகளை மீறி ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தி சித்ரவதை செய்ததாக வேலூர் சிறைத்துறை காவல்துறைத் துணைத்தலைவர் ராஜலட்சுமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உட்பட 14 பேர் மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி வழக்கு பதிவு செய்தனர்.

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் உள்ளார். இவரை வேலூர் மத்திய சிறை காவல்துறைத் துணைத்தலைவர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் வீட்டு வேலைக்கு பயன்படுத்திய போது காவல்துறைத் துணைத்தலைவர் வீட்டில் ரூ.4.5 லட்சம் மாயமானது.

கைதி சிவகுமார் தான் எடுத்து இருப்பார் என்ற யூகத்தின் அடிப்படையில் அவரை கடுமையாக தாக்கியதாகவும், தனிமை சிறையில் அடைத்து, சிறைத்துறை ஜெயிலர் மற்றும் காவலர்கள் சித்ரவதையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆயுள் தண்டனை கைதி சிவகுமார், தன்னை பார்க்க வந்த தாய் கலாவதியிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து கலாவதி வழக்கறிஞர் புகழேந்தி மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த விசாரித்து நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் சிபிசிஐடி உத்தரவிட்டனர்.

அதன்படி சிபிசிஐடி விசாரணை நடத்தியதில், காவல்துறைத் துணைத்தலைவர் ராஜலட்சுமி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆயுள் தண்டனை கைதி சிவகுமாரை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தியது தெரியவந்தது. மேலும், தமிழ்நாடு சிறைக்கையேட்டின் 447-வது விதியின் படி தண்டனை கைதிகள் யாரையும் நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளியே அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த விதியை காவல்துறைத் துணைத்தலைவர் ராஜலட்சுமி மற்றும் வேலூர் சிறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் ஆகியோர் மீறியுள்ளனர்.

காவல்துறைத் துணைத்தலைவர் வீட்டில் மாயமான ரூ.4.5 லட்சத்தை ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் திருடியாக அவரை 95 நாட்கள் தனிமை சிறையில் அடைத்து வைத்து வேலூர் சிறை ஜெயிலர் அருள்குமரன், காவல்துறைத் துணைத்தலைவர் பாதுகாப்பு அதிகாரி ராஜூ என 8 ஆண் சிறை காவலர்கள், 2 பெண் சிறை காவலர்கள் சேர்ந்து கொடுமைப்படுத்தியதும் சிபிசிஐடி விசாரணையில் உறுதியானது.

அதைதொடர்ந்து சிபிசிஐடி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் மத்திய சிறை காவல்துறைத் துணைத்தலைவர் ராஜலட்சுமி, கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட 14 பேர் மீது பிஎன்எஸ் 146, 127(8), 118(2), 115(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைதொடர்ந்து காவல்துறைத் துணைத்தலைவர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஜெயிலர் உட்பட 14 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை பாயும் என உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது..!

கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் கரூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் அவரது சகோதரர் சேகர் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரருக்கு முன்பு ஜாமின் வழங்கக் கூடாது என்றும், அவருக்கு முன்பு ஜாமின் வழங்கக் கூடாது என்றும், அவருக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது.

என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர், செல்வராஜ் ஆகியோர் சிபிசிஐடி கைது செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.