பெண் பத்திரிகையாளர்கள் குறித்து வழக்கில் S.V. சேகர் சரணடைவதற்கான காலஅவகாசத்தை ஜூலை மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டனர். நாடகம், சினிமா, சின்னத்திரை என பல ஆண்டுகளாக பிரபல நடிகராக வலம் வரும் S.V. சேகர் அதிமுக சார்பாக MLA வாக சட்டசபைக்கு சென்றவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாஜகவில் பயணித்தார். அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக S.V. சேகர் பாஜகவில் இருந்த வெளியேறினார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை S.V. சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதைத்தொடர்ந்து S.V. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் S.V. சேகர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கையும், நெல்லையில் S.V. சேகர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளையும் 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னையிலுள்ள MP., MLA க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், S.V. சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இந்த சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் S.V. சேகர் மேல்முறையீடு செய்து இருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், S.V. சேகருக்கு வழங்கிய ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து S.V. சேகர் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரை நேரடியாக சந்தித்து விளக்கமளிக்க விளக்கமளிக்க தயார் என S.V. சேகர் தெரிவித்தார். இதையடுத்து S.V. சேகரின் முறையீட்டை ஏற்று அவர் சரண் அடைவதற்கு அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நீதிபதிகள், S.V. சேகர் சரணடைவதற்கான காலஅவகாசத்தை ஜூலை மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.