தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா 4 சாலை பந்தயம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளது. 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாலை சர்க்யூட்டில் 19 வளைவுகள் அமைந்துள்ளது. இது பந்தய ஓட்டுனர்களுக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும். தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தப்படுவதால் இந்தப் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இன்று பிற்பகல் 2.45 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பயிற்சி சுற்றுகள் நடைபெறுகின்றன. இதை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தகுதிச் சுற்றுகள் இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். தகுதி சுற்றின் அடிப்படையிலேயே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரதான பந்தயத்தில் ஓட்டுனர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். இதனால் தகுதி சுற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
நாளை பிரதான கார் பந்தயங்கள் 2 போட்டிகளாக நடைபெறுகிறது. பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 5.05 மணிக்கு தொடங்கும். இது 25 நிமிடம் மற்றும் ஒரு ரவுண்டை கொண்டது. இந்த பந்தயம் 5.35 மணிக்கு நிறைவடையும். பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன் ஷிப் பந்தயத்தின் 2-வது போட்டி இரவு 9.05 மணிக்கு தொடங்கும். இதுவும் அதே நிமிடங்களை கொண்டது. இந்த பந்தயம் 9. 30 மணிக்கு நிறைவடையும்.
அதேவேளையில் இந்தியன் ரேசிங் லீக் பந்தயத்தின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கும், 2-வது போட்டி இரவு 10.05 மணிக்கும் தொடங்கும். இந்த 2 பந்தயங்களும் தலா 30 நிமிடங்களைக் கொண்டது. இரவு 10.35 மணியுடன் போட்டிகள் முடிவடையும். இது தவிர ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டியும் நடத்தப்படுகிறது. பந்தயங்களுக்கு இடையில் பொழுதுபோக்கு கார் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் ரேசிங் லீக் அணியாகவும் நடத்தப்படுகிறது. பார்முலா எப் 4 பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படும்.
இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெறுவார்கள். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 18 வீரர்கள், 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியும் 2 கார்கள் வீதம் 16 கார்களை பயன்படுத்தும்.
சென்னை டர்போ அணியில் இந்திய வீரர்களான சந்தீப் குமார், முகமது ரியான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் லான்கேஸ்டர், வெளிநாட்டைச் சேர்ந்த வீராங்கனை எமிலி இடம் பெற்றுள்ளனர். போர்ச்சுக்கல், செக் குடியரசு, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.
போட்டியில் பங்கேற்கும் கார்களை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பந்தயத்தையொட்டி தீவுத் திடலைச் சுற்றியுள்ள சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியா்பாலம் என போட்டி நடைபெறவுள்ளசாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பார்வையாளர்கள் போட்டிகளை பாா்த்து ரசிக்க இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, தீவுத் திடல் என 8 இடங்களில் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்காக, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகம், கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.