கனிமொழி: தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன்வரிசையில், ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலில் நடந்த தேர்தல் பரப்புரையில், “இன்றைக்கு இந்தியாவை ஆளும் பாஜகவால் மக்கள் மதம், ஜாதியால் பிரித்து வைக்கப் பட்டுள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களிடையே ஒற்றுமை இல்லை. மணிப்பூர் மாநிலம் கலவரத்தால் கொழுந்து விட்டு எரிகிறது. அங்கு பிரதமர் மோடி ஒரு முறை கூட செல்லவில்லை. இயற்கை சீற்றங்களால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருந்த போதும் கூட வரவில்லை.

ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் அடிக்கடி வருகிறார். டெல்லி விவசாயிகள் போராட்டத்தை பாஜக கண்டுகொள்ளவில்லை. விவசாயிகள், சிறுபான்மையினர், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதானி, அம்பானிகளுக்கு வேண்டப்பட்ட அரசாக பாஜக அரசு உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது பிரச்சாரத்தில் மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காஸ், சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும். தென்னை விவசாயிகளின் கோரிக்கையான கொப் பரைக்கு அடிப்படை ஆதார விலை வழங்கப்படும்” என கனிமொழி பேசினார்.