இன்று முதல் மாநகர போக்​கு​வரத்து கழக ஊழியர்​களுக்கு ‘பயோமெட்ரிக்’ கட்​டா​யம்

மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இன்று முதல் ‘பயோமெட்ரிக்’ மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்கள் வருகையை ‘பயோமெட்ரிக்’ மூலம் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமை அலுவலகம், அனைத்து பணிமனைகள், தொழில்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. இன்று முதல் ‘பயோமெட்ரிக்’ மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.