கடந்த அக்டோபர் 2-ம் தேதி அன்று மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை பொருள் கடத்தல் மற்றும் அவற்றை பயன்படுத்தியதற்காக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இதற்காக போதைப் பொருள் தடுப்பு முகமையின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவை, தனிப்பட்ட முறையில் மகாராஷ்டிரா திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் நவாப் மாலிக் தாக்கி பேசி வருகிறார்.
சமீர் வான்கடே பிறப்பால் ஒரு முஸ்லிம், என்றாலும் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என போலியாக சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். மேலும் ஆர்யன் கானை விடுவிக்க லஞ்சமாக பணம் தரவேண்டும் என மிரட்டினார், சட்டவிரோதமாக போனை ஒட்டுக்கேட்டார் என சமீர் வான்கடே மீது அமைச்சர் நவாப் மாலிக் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.
மேலும் பிரபாகர் செயில் என்ற சாட்சி மற்றும் சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் மீது போதைப் பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் கேட்டதாக கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது அவர் மீது விசாரணை நடைபெறுகிறது. இதை தவிர மும்பை காவல்துறையினரும் சமீர் வான்கடே மீதான ஊழல் புகாரை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீர் வான்கடேயின் மனைவி கிராந்தி ரெட்கர், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ளார். அதில் ஒரு மராட்டியர் என்ற அடிப்படையில் உங்களிடம் இருந்து சிறிதளவாவது நீதியை எதிர்பார்க்கிறேன். தேவையில்லாமல் எனது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இன்று பால் தாக்கரே உயிரோடு இருந்திருந்தால் ஒரு பெண்ணின் மரியாதை மீதான தனிப்பட்ட தாக்குதலை சகித்துக் கொண்டிருக்கமாட்டார். அவருடைய தலைமைப் பண்பு மற்றும் படிப்பினையின் வழித்தோன்றலாகவே உங்களை பார்க்கிறேன்.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவை உத்வேகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த அரசில் ஒரு பெண்ணின் மரியாதை நகைச்சுவை ஆக்கப்பட்டுள்ளது. நான் ஒரு நடிகை, என்னால் அரசியலை புரிந்து கொள்ளமுடியவில்லை. அதில் எனக்கு ஆர்வமும் கிடையாது. என் மீது நடக்கும் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் அரசியலின் கீழ்நிலையை காட்டுகிறது. எனக்கும், என் குடும்பத்தினருக்கும் அநீதி இழைக்கப்படாது என உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.” என கிராந்தி ரெட்கர் தெரிவித்துள்ளார்.