கின்னஸ் சாதனை: 28 லட்சம் விளக்கொளியில் ஜொலித்த அயோத்தி..!

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபின், அங்கு முதல் முறையாக நடைபெறும் தீப உற்சவத்தை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 லட்சம் விளக்குகளால் நேற்று அலங்கரிக்கப்பட்டு,இது கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது.

வட இந்தியாவில் ராமர் வனவாசத்தை முடித்து விட்டு அயோத்தி திரும்புவதை , தீபாவளியாகவும், தீப உற்சவமாகவும் 5 நாள் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபின், அங்கு முதல் முறையாக நடைபெறும் தீப உற்சவத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த உத்தர பிரதேச அரசு முடிவு செய்தது. இதற்காக ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரையின் 55 படித்துறைகளில் நேற்று 28 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி அலங்கரிக்கப்பட்டன.

விளக்கொளியால் ஏற்படும் மாசுவை குறைக்க கோயிலுக்கு வெளியே மெழுகு விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. விளக்கேற்றும் நிகழ்ச்சியில் 30,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பை சேர்ந்த 30 பேர் குழுவினரும் இங்கு வந்திருந்தனர். அவர்கள் டிரோன்கள் மூலம் விளக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீப உற்சவத்தை பார்வையிட பல்லாயிர கணக்கான பக்தர்கள் கூடி இருந்தனர். ஆகையால், இந்த தீப உற்சவத்தை பக்தர்கள் பார்வையிட ஆங்காங்கே LED திரைகள் பொருத்தப்பட்டு இருந்தன. மேலும் தீப உற்சவத்தை முன்னிட்டு, 10,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.