ஆகஸ்ட் 17 திருமாவளவன் பிறந்தநாளையொட்டி, சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை முதலே திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவிக்க நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவரது தாயார் பெரியம்மாள் திருமாவளவனுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தினார்.
மேலும் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி நேற்று தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட விசிக சார்பில் மாலை 4 மணியளவில் புதுச்சேரி அருகேயுள்ள சங்கமித்ரா அரங்கில் விழா நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவாக கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றுகிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்தநாள் நிகழ்வில், `வி.சி.க நடத்தும் மாநாடு` குறித்தான அறிவிப்பை வெளியிட்டதோடு, கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் திருமாவளவன். அதோடு தி.க தலைவர் கி.வீரமணி, இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், நாஞ்சில் சம்பத் ஆகியோரின் உரைகளும் கவனம்பெற்றிருக்கின்றன.
சென்னை காமராஜர் அரங்கத்தில் ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை தொடங்கி ஆகஸ்ட் 17-ம் தேதி அதிகாலை வரை நடைபெற்ற நிகழ்வில் கவியரங்கம், வாழ்த்தரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. நாஞ்சில் சம்பத் தலைமையிலான பட்டிமன்றமும், கவிஞர் அப்துல் காதர் தலைமையிலான கவியரங்கமும் கவனம் ஈர்த்தன. நடிகர் ராஜ்கிரண், இசையமைப்பாளர் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில் “திருமாவளவன் மீது சிலருக்குத் தற்போது திடீர் அரசியல் காதல் வந்திருக்கிறது. ஆனால், எங்களுக்கும் திருமாவுக்கும் இடையேயானது கொள்கைப் பாசம். திருமாவுக்குக் கொள்கைப் பாலூட்டியது பெரியார் திடல்” என்றவர், தொடர்ந்து “தி.மு.க கூட்டணியைப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. பல கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே அரசியல் உள்ளிட்ட அனைத்திலும் திருமாவளவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என கி.வீரமணி தெரிவித்தார்.