ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டம்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது இலந்தைகூடம் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் பொது கழிவறை ஒன்று கட்டப்பட்டது. போதிய தண்ணீர் வசதி இல்லாததால் காரணத்தால் அந்த கழிவறை செயல்படாமலேயே இருந்து வருகிறது. இதனால், வீட்டில் கழிவறை வசதி இல்லாத பெண்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை திறந்தவெளி கழிக்க வேண்டி உள்ளது.  இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது கழிவறையின் முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

இதனால், இயற்கை உபாதையை கழிக்க எங்கு செல்வது என்று தவித்த பெண்கள் கழிவறையை செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்ததோடு, நேற்று மாலை ஊராட்சி மன்ற தலைவரை அனுகி முறையிட்டனர். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றம் அடைந்த அவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பள்ளி மாணவி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேற்று மீண்டும் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ஆர்.சி. நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் இளந்தென்றல் என்ற மாணவி பள்ளி அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனு அளித்தார். அந்த மனுவில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் அரசு உதவி பள்ளிக்கு அருகிலேயே டாஸ்மாக் மது கடை செயல்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மது பாட்டில்களை குடித்துவிட்டு பள்ளியில் உள்ளே தூக்கி எறிந்து விடுகின்றனர்.

இதனால் பாட்டிலில் உடைந்து காணப்படுவதாகவும் மதுக்கடை அருகே அமர்ந்து குடிப்பதாலும் கூட்டமாக நிற்பதாலும் அடிக்கடி சண்டை நிகழ்வதாகவும் பள்ளி வந்து செல்வதற்கு அச்சப்படும் சூழ்நிலை உள்ளதாகவும் மேலும் வரும் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மதுக் கடைகளை அகற்றி மாணவர்கள் அச்சமின்றி பள்ளிக்கு வரவும் படிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் அப்பள்ளியில் ஆறாவது படிக்கும் மாணவி இளந்தென்றல் மற்றும் அவரது சகோதரர் மனு அளித்தனர்.

தாசில்தார் வாகனத்தை, விஷ பாட்டிலுடன் முற்றுகையிட்ட இருளர் சமுதாய மக்கள்

அரியலூர் மாவட்டம் விளாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தேளூர், குடிசல், மண்ணுழி ஆகிய ஊர்களில் கடந்த 2006-07-ம் ஆண்டு மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு, ஒரத்தூர் இருளரின மக்கள், விவசாயம் செய்த நிலத்தை பட்டா போட்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இருளர் சமுதாய மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்ததைத்தொடர்ந்து, 2012-ம் ஆண்டு பட்டா ரத்து செய்யப்பட்டது.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி, இருளர் சமுதாயத்தினருக்கு பட்டா வழங்க முன்வந்தார். இதையடுத்து அந்த இடத்தை அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு, இடத்தை அனுபவித்து வந்த இருளர் சமுதாய மக்களுக்கு பட்டா வழங்க, 2014-ம் ஆண்டு அரியலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

தற்போது இருளர் சமுதாயத்தினர் ஆழ்துளை கிணறு அமைத்து எள், கடலை, உளுந்து, பருத்தி, முந்திரி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து அப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வருவாய்த்துறை அதிகாரிகள், இருளரின மக்கள் விவசாயம் செய்துவரும் நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அரியலூர் தாசில்தார் ராஜமூர்த்தி, நில அளவையர், விளாங்குடி கிராம நிர்வாக அலுவலர் அனுசுயா தேவி, தேளூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்த பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருளர் சமுதாயத்தினர் பட்டா மற்றும் கையில் விஷ பாட்டிலுடன் சென்று, தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 2021-22-ம் நிதி ஆண்டிற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்ற மகளிர் ஆகியோருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளது.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாசில்தாரிடம் இருந்து பெற்ற அசல் குடும்ப ஆண்டு வருமான சான்று (ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்), இருப்பிட சான்று அல்லது குடும்ப அட்டை நகல், குறைந்தபட்சம் ஆறு மாத கால தையல் பயிற்சி பெற்ற சான்றின் நகல், வயதுக்கான சான்று (20 முதல் 40 வயது வரை), சாதி சான்று நகல், ஆதார் அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட்டு அளவுள்ள புகைப்படங்கள் மற்றும் முன்னுரிமை கோருவதற்கு சான்றுகள் இருப்பின், அதன் நகல் ஆகியவைகளுடன் விண்ணப்பத்தை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் அறை எண் 20-ல் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நடந்த வழிகாட்டுதல் வகுப்பு

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்கள் உதவி மையத்திற்கு நியமிக்கப்பட்ட பெண் காவல்துறையினர் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வகுப்பு நடைபெற்றது.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நடந்த வழிகாட்டுதல் வகுப்பின் தொடக்க நிகழ்ச்சியில் ஏ.டி.ஜி.பி. சீமா அகர்வால் காணொலி வாயிலாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.