Anil Ambani, 24 நிறுவனங்களுக்கு ‘SEBI ’ தடை

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதியை முறைகேடான முறையில் வேறு நிறுவனங்களுக்குத் திருப்பியது கண்டறியப்பட்டதை அடுத்து அனில் அம்பானி, மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு செபி தடை விதித்துள்ளது.

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக தெரிவித்துள்ள செபி, இதனால் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், தான் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக மார்ச் 2018 இல் சுமார் ரூ.59.60 ஆக இருந்த ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு, மார்ச் 2020-ல் ரூ. 0.75 ஆக சரிந்தது என்றும், மோசடியின் அளவு தெளிவாகத் தெரிந்ததும், நிறுவனம் அதன் வளங்களை வெளியேற்றியதுமே இதற்குக் காரணம் என செபி கூறியுள்ளது.

இந்த மோசடி காரணமாக 9 லட்சத்துக்கும் அதிகமான பங்குதாரர்கள் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளனர் என்றும் செபி தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகளான அமித் பாப்னா, ரவீந்திர சுதால்கர் மற்றும் பிங்கேஷ் ஆர் ஷா ஆகியோர் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்துள்ள செபி, அமித் பாப்னாவுக்கு ரூ.27 கோடியும், ரவீந்திர சுதால்கருக்கு ரூ.26 கோடியும், பிங்கேஷ் ஆர் ஷாவுக்கு ரூ.21 கோடியும் அபராதம் விதித்துள்ளது.