செல்பி எடுக்க சென்றபோது பாறை இடுக்கில் விழுந்த கல்லூரி மாணவி..! 20 மணி நேரத்துக்கும் மேலாக‌ போராடி மீட்பு..!

செல்பி எடுக்க சென்றபோது கால் தவறி, பாறை இடுக்கில் சிக்கிய கல்லூரி மாணவி 20 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் பத்திரமாக‌ மீட்டகப்பட்டார். கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் குப்பி அருகிலுள்ள ஸ்ரவர்ணபுராவை சேர்ந்த சோமநாத் கவுடா மகள் அம்சா எஸ் கவுடா. இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தும்கூருவை அடுத்துள்ள மைடாலா ஏரிக்கு நண்பர்களுடன் அவர் சுற்றுலா சென்றார். அங்கு பாறை மீது ஏறி செல்பி எடுத்தபோது கால் தவறி பாறையின் இடுக்கில் விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கீழே விழுந்த பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பாறைகளை உடைத்து, கயிறு மற்றும் சங்கிலி மூலமாக மீட்க முயன்றனர். ஆனால் அவர் பாறைகளுக்கு இடையில் 30 அடிக்கும் கீழேசிக்கி இருந்த‌தால், உடனடியாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இரவு நேரத்தில் குறைந்த ஒளி மற்றும் குறைந்த அளவிலான தொழில்நுட்பத்தைக் கொண்டு தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிராம மக்கள் மணல் மூட்டைகளை போட்டு அடைத்து, தண்ணீரை மடை மாற்றிவிட்டனர். இதையடுத்து மீட்பு குழுவினர் பாறைகளை குடைந்து உள்ளே இறங்கினர். மீட்பு குழுவினர் 20 மணி நேரத்துக்கும் மேலாக‌ போராடி, அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.