தொல்.திருமாவளவன்: மது ஒழிப்பு ஒற்றைக் கொள்கை- கவுதம புத்தரின் முழக்கம் அதுவே..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.

இந்த மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் 13 தீர்மானங்கள் தொல்.திருமாவளவன் நிறைவேற்றினார். மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசுகையில், மாநாடு தொடங்கியதும் மழை வரும் என்று பயந்தேன். இயற்கை நம் பக்கமே உள்ளது. மது ஒழிப்பு மாநாட்டிற்கு லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்.

இந்த மாநாடு அரசியலுக்காகவோ, தேர்தலுக்காகவோ இல்லை. மது வேண்டாம் எனக்கூறும் அனைவரின் ஆதரவும் நமக்கு தேவை. மது ஒழிப்பு ஒற்றைக் கொள்கை- கவுதம புத்தரின் முழக்கம் அது. புத்தர் மட்டுமல்ல உலகில் எந்த மகானும் மதுவை ஆதரிக்கவில்லை.

மது ஒழிப்பு மட்டுமே இன்றைய மாநாட்டின் ஒரே கோரிக்கை. இந்த மாநாடு, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த மாநாடு. மதுகடைகள் நாளை மூடுவதாக இருந்தால், இன்றே மதுபாட்டில்களை 2 மடங்கு வாங்கி வைக்கிறார்கள். இந்தியா முழுவதும் 7 அல்லது 8 நாட்கள் மட்டுமே மதுக்கடைகள் மூடப்படுகிறது. மற்ற நாட்களில் மது ஆறாக ஓடுகிறது. மது ஒழிப்பில் திமுகவுக்கும் உடன்பாடு உள்ளது. நடைமுறையில் சிக்கல் இருப்பதாகவே திமுக நினைக்கிறது.

மது ஆலைகள் வைத்திருப்பவர்கள் திமுகவினர், அவர்கள் எப்படி மாநாட்டிற்கு வருவார்கள் என்றும் கேட்கின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது நம்பிக்கை வைத்து, மது ஒழிப்பு மாநாட்டில் திமுக சார்பில் பங்கேற்றுள்ளனர் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.