மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார். மம்தா பானர்ஜிக்கும் பாஜக அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசை வரும் தேர்தலில் வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி உறுதியாக உள்ளார். இதற்காக எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திலும் மம்தா பானர்ஜி முக்கிய பங்காற்றி வருகிறார்.
அதே வேளையில், மாநிலத்திலும் மம்தா பானர்ஜிக்கு பாஜக கடும் சவால் அளித்து வருகிறது. சமீபத்தில் நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி அதிக இடங்களில் வென்றாலும் பாஜக கடும் சவால் கொடுத்தது. வன்முறை, ரத்த களறியுடன் நடந்த உள்ளாட்சி தேர்தல் நாடு தழுவிய அளவில் கவனம் பெறுவதாக இருந்தது. இப்படி பாஜகவுடன் முட்டல் மோதலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருவது அம்மாநில அரசியலில் பரபரப்புக்கு சற்றும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
மேற்கு வங்காள பாஜக நிர்வாகிகளுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை யுத்தமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சரும் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள போங்கான் தொகுதி எம்.பியுமான ஷாந்தனு தாகூர் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில், “மேற்கு வங்க அரசின் செயல்பாடு காலாவதியாகிவிட்டது. அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மோசடி நடக்காமல் இருந்து இருந்தால் பாஜக ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். அதே வேளையில் திரிணாமூல் காங்கிரஸ் அரசு கண்காணிப்பில் நடைபெறும் கடைசி தேர்தல் இதுதான்.
ஐந்து மாதங்களுக்கு மேல் மம்தா பானர்ஜி ஆட்சி நீடிக்காது என நான் நம்புகிறேன் ” இவ்வாறு அவர் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தாரிடம் மம்தா ஆட்சி 5 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று மத்திய அமைச்சர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த மஜும்தார் கூறுகையில், “எது வேண்டுமானாலும் எப்போதும் நடக்கலாம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
மம்தா பானர்ஜி பின் தொடர்ந்து செல்ல முடியாது என்று அவரது கட்சி எம்.எல்.ஏக்களே திடீரென மறுக்கலாம். யாருக்கு தெரியும். இப்படி நடக்கும் என்று நான் கூறவில்லை. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்றார். பாஜக தலைவரின் இந்த பேச்சு மேற்கு வங்காள அரசியலில் பரபரப்பை கிளப்பி விட்டது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஷாந்தனு சென் கூறியதாவது:-
டெல்லியில் தங்கள் மதிப்பை அதிகரித்துக் கொள்வதற்கு பாஜக தலைவர்களுக்கு இடையே தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெரும் மக்கள் ஆதரவுடன் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. எங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது” என்றார்.