சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சின்னையாவின் 13 வயதில் மகனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி இடது கால் விரலில் வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஆதம்பாக்கத்தில் உள்ள மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கிருந்த மருத்துவர் நரம்பு சார்ந்த பிரச்னை என்று கூறி, ஆதம்பாக்கத்தில் உள்ள மவுன்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவர் சரவணன் பாலச்சந்தரை பரிந்துரை செய்ததாக தெரிகிறது. எனவே அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு அவரது பெற்றோர் அங்கே சென்றுள்ளனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சரவணன், காலில் ஒரு ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளதாகவும், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் இதனை சரி செய்துவிடலாம் என்றும் கூறி, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்துள்ளார்.
இதையடுத்து சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் கால் கருப்பு நிறமாக மாறியதால் பதறிப்போன பெற்றோர், மீண்டும் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கே பரிசோதித்த மருத்துவர், காலில் வேறொரு பிரச்னை இருப்பதாகவும், இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி அந்த சிகிச்சையும் செய்யப்பட்டது.
ஆனால் அதற்கு பிறகு சிறுவனின் கால் மூட்டுக்கு கீழ் கட்டி ஒன்று உருவாகியுள்ளது. இந்த கட்டியை அகற்ற வேறொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி, அதுவும் செய்யப்பட்டது. எனினும் அந்த கால் சரியாகாமல் இருந்துள்ளது. இதையடுத்து சிறுவனின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக கூறி, பெற்றோரை சமரசம் செய்து அவரது காலை நீக்கியுள்ளது மருத்துவமனை.
அதன்படி சிறுவனுக்கு கால், மூட்டிலிருந்து பாதம் வரை அகற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக தனது மகனின் கால் பறிபோனதை உணர்ந்த பெற்றோர், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளனர். இதனிடையே பிரச்சனை பெரிதாக ஆகிவிடக்கூடாது என்பதால் கால் அறுவை சிகிச்சைக்கான செலவை மருத்துவமனையே ஏற்பதாகவும், மருந்துகளுக்கு உண்டான பணத்தை மட்டும் பொறுமையாக செலுத்துமாறும் சிறுவனின் பெற்றோரிடம் மருத்துவர் சரவணண் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் ஆதம்பாக்கத்தில் உள்ள மவுன்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். அப்போது போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும், வருகைப் பதிவுகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் 7 நாள்களுக்குள் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.