ஆடி மாத திருவிழாவில் தலித்துகள் வழிபட்டதால் கோவில்லை இடித்து தள்ளிய அவலம்..!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே கெம்மன்குப்பம் என்ற கிராமத்தில் யாதவர்கள், வன்னியர்கள், நாயுடுக்கள், செட்டியார்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் உள்ளிட்ட சமூகத்தினர் வசிக்கிறார்கள். இந்த கிராமத்தில் நடைபெறும் காளியம்மன் கோவிலின் ஆடி மாத விழாக்களில், பட்டியல் சாதி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கக் கூடாது என்ற மற்ற சாதியனர் சேர்ந்து முடிவெடுத்தார்கள். ஊர் கட்டுப்பாடாக இதனை அறிவித்தார்கள். இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித்துகள் மீறியதால், கடந்த வாரம், கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள கெம்மன்குப்பம் கிராமத்திற்கு அருகிலுள்ள காளியம்மன் கோவிலை குறிப்பிட்ட சாதி இந்துக்கள் இடித்திருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் தலித்துகள் புகார் அளித்த நிலையில், ஒரு வார காலத்தாமதத்திற்கு பிறகு கே.வி.குப்பம் காவல்துறை, குறிப்பிட்ட இடைநிலை சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி, சமீபத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் இந்த விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஆகஸ்ட் 14 அன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்..! கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது..!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சி ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த போர்வெல் மெக்கானிக் மேகநாதன். இவர் தனது வீட்டுமனை பட்டாவிற்கு பெயர் மாற்றம் செய்ய அக்ராவரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்தார். இதனை பரிசீலித்து பெயர் மாற்றம் செய்து தருவதாக அவரிடம் கிராம நிர்வாக அலுவலரான கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மேகநாதன் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு பலமுறை சென்றும் பட்டா பெயர் மாற்றம் செய்து தரவில்லை. அது குறித்து கேட்டபோது கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளரான பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த தேன்மொழி ஆகியோர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத மேகநாதன் அது குறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் 20 என மொத்தம் 10 ஆயிரம் ரூபாயை நேற்று மதியம் அக்ராவரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் தேன்மொழியிடம் மேகநாதன் வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறை கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளர் தேன்மொழியை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெண் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை..!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியம் செர்லப்பல்லி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் 70 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1996-ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பட்டா வழங்கப்பட்ட பயனாளிகளுக்கான இடத்தை அளவீடு செய்து தராததால் பயனாளிகள் வீடு கட்டாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

ஜமாபந்தி நிகழ்ச்சி, மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆகியவற்றில பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.