புற்றுநோயை குணப்படுத்தும் அரிய கண்டுபிடிப்பு.. சாதித்த பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள்..!

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் துறை உதவி பேராசிரியையாக கே.எம்.சாரதா தேவி மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியராக குருசரவணன் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த வெள்ளி நானோ துகள் கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது.

இதுகுறித்து பேராசிரியர்கள் சாரதாதேவி மற்றும் குருசரவணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது உள்ள புற்றுநோய் மருந்துகள் புற்றுநோய் பாதித்த செல்களை அழிக்கின்றன. அது மட்டுமின்றி புற்றுநோய் பாதிக்காத செல்களையும் இப்போது உள்ள புற்று நோய் மருந்துகள் அழிக்கின்றன. ஆனால் நாங்கள் செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து கண்டுபிடித்துள்ள வெள்ளி நானோ துகள்கள் புற்றுநோய் பாதித்த செல்களை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் எளிதில் கண்டறிந்து அழிக்கிறது.

இதன்மூலம் புற்றுநோயில் இருந்து மீள இந்த துகள்கள் உதவுகின்றன. மேலும் புற்றுநோய் தாக்காத செல்கள் அழிக்கப்படாமலும் இந்த வெள்ளி நானோ துகள்கள் பாதுகாக்கின்றன. முதற்கட்டமாக இந்த வெள்ளி நானோ துகள்கள் எலிக்கு செலுத்தி வெற்றி அடைந்து உள்ளோம். மனிதர்களின் பயன்பாட்டிற்கு இந்த வெள்ளி நானோ துகள்களை கொண்டு வர சில ஆண்டுகள் பிடிக்கும் என்று அவர்கள் அவர்கள் தெரிவித்தனர்.