பெரியார் சிலை முன் காதல் ஜோடி சுயமரியாதை திருமணம்…!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா, வெல்லம்பட்டி கிராமம் கருப்பனம்பட்டி பகுதியில் வசிக்கும் ரமேஷ் மகன் ரஞ்சித் குமார் என்ற எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுக்கா தொண்டாமுத்தூரில் வசிக்கும் ஏழுமலை மகள் கெஜலட்சுமி என்ற பெண்ணும் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.மேலும், இந்த சுயமரியாதை திருமணத்தை, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கரூர் மாவட்ட தலைவர் கு.கி.தனபால் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் நலக் கட்சி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தென்னரசு, மாவட்ட விவசாய அணி செயலாளர் வேலுசாமி, திமுகவைச் சேர்ந்த வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் நகரப் பொருளாளர் ரகுமான், மோகன்ராஜ் வழக்கறிஞர் உதயநிதி ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, சுயமரியாதை திருமணம் குறித்து சாமானிய மக்கள் நல கட்சியின் மாநில பொதுச்செயலாளர், வழக்கறிஞர் குணசேகரன் கூறுகையில், தந்தை பெரியாரின் கொள்கை வழியில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை தாண்டி எம்பிஏ பட்டதாரி வாலிபர், பெரியாரின் வழியை ஏற்று, சுயமரியாதை திருமணம் செய்ததை பாராட்டி வாழ்த்துகிறோம் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கரூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் கோரிக்கை மனுவினை அளித்தனர். கோரிக்கையை பெற்றுக் கொள்ள மறுத்து, கரூர் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர், பேபி காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்றார். மேலும் அங்கிருந்த காவலர்களும் காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர்.

இந்நிலையில், கரூர் நகர காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி, பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனர். இன்று கரூர் நகர காவல் துறையினர், இருதரப்பு பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.சாதி மறுப்பு சுயமரியாத திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றவரிகளிடம் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் கோரிக்கை மனுவினை பெற்றுக்கொள்ளமால் காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.