சீமான்: வெறிநாய்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்குகின்ற கொடுந்துயர நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஆடுகள் மற்றும் இளம் மாடு கன்றுகளைத் தாக்கி உயிரிழப்பினை ஏற்படுத்தி, ஏழை எளிய உழவர் பெருமக்களுக்குப் பெருத்த பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள கொங்குப் பகுதி மக்கள் மீள முடியாத பொருளாதார இழப்பிற்கு ஆளாகி, செய்வதறியாது தவித்து வருகின்றனர். காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுவெளியில் சுற்றுத்திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகளிடம் வேளாண் மக்கள் பலமுறை புகாரளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஆகவே, திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளைத் தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை மாவட்ட நிர்வாகம் விரைந்து அப்புறப்படுத்த வேண்டுமெனவும், வெறிநாய்களால் கால்நடைகளைப் பறிகொடுத்து பெரும் நட்டத்திற்கு ஆளான வேளாண் பெருங்குடி மக்களுக்கு உரிய இழப்பீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.