வீட்டு வசதி வாரிய கே.கே.நகர் கோட்டத்துக்கு உட்பட்ட திட்டப் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவைத் தொகைகளை செலுத்தி, ஒதுக்கீடு ரத்தாவதைத் தவிர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், கே.கே.நகர் கோட்டத்துக்கு உட்பட்ட அரும்பாக்கம், கே.கே.நகர். மதுரவாயல், அசோக் நகர், எம்டிபி திட்டம், ராஜா அண்ணாமலைபுரம்.
மேலும், விசாலாட்சி தோட்டம், மாந்தோப்பு காலனி, 144-ராமாபுரம், 16-வளசரவாக்கம், 428-புலியூர், பழைய ராமாபுரம், சிஐடி நகர் மேற்கு, நெசப்பாக்கம், 384-ராமாபுரம், 48-புலியூர், மரவேலைப் பிரிவு திட்டம் ஆகிய திட்டப் பகுதிகளில் வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்களில் பலர் வாரிய விதிகளின்படி தொகை திருப்பிச் செலுத்தும் காலம் முடிவுற்றும், தமிழக அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும் நீண்ட காலமாக நிலுவைத் தொகையை செலுத்த முன்வரவில்லை.
ஆகையால், ஒதுக்கீடுதாரர்கள் இந்த அறிவிப்பைக் கண்டவுடன் தங்களிடம் உள்ள ஒதுக்கீடு ஆணை, தொகை செலுத்திய ரசீது மற்றும் ஒதுக்கீடு தொடர்பான அசல் ஆவணங்களுடன் கே.கே.நகர் கோட்ட அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு கணக்கை நேர் செய்து நிலுவைத் தொகைகளை செலுத்த வேண்டும். மேலும், வாரிய விதிமுறைகளின்படி கிரயப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்யும் நடவடிக்கையைத் தவிர்க்கலாம் என ரஷ்மி சித்தார்த் ஜகடே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.