டாடா நிறுவனம் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு..!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் ஒன்றியம் மூத்த நாயக்கன் வலசு முதல் தாராபுரம் வட்டம் மூலனூர் ஒன்றியம் தூரம்பாடி வரை டாடா நிறுவனம் விவசாயிகள் விலை நிலத்தில் விவசாயிகளின் அனுமதியின்றி உயர் மின் கோபுரம் அமைத்து வருகிறது.

இதனை கண்டித்து வேலப்பநாயக்கன் வலசு, எரசனம் பாளையம், கருப்பன்வலசு, தூரம்பாடி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக எரசனம் பாளையம் கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயி செங்கோடன் பேசுகையில், உயர் மின் அழுத்த கோபுரத்தினால் தங்களது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் மேலும் டாடா நிறுவனம் கே எஸ் என்ற துணை நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மூலனூர், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதில் மின்சார கம்பங்களை அமைத்து வருகின்றனர்.

மேலும் விவசாயிகளிடம் எந்தவித அனுமதியும் கேட்காமல் 46 பனை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். அதனால் நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் .இது போன்ற நிறுவனங்களுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கக் கூடாது.

இதுமட்டுமின்றி, விவசாயிகளின் விலை நிலங்கள் தற்போதைய சந்தை மதிப்பு என்ன என்பதை எந்த நிறுவனமும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நிறுவனங்களே ஒரு குறிப்பிட்ட தொகையை விவசாயிகளுக்கு தருவதாக கூறி வருகின்றனர். ஆகையால், எங்கள் கிராமங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

மற்றொருபுறம், உயர்மின் கோபுரங்கள் அமைத்தால் ஆடு, மாடு சினை பிடிப்பதில் சிக்கல் ஏற்படும் மற்றும் நிலத்தடி நீர் குறைந்து விடும் இத்தனை தொடர்ந்து நிலத்தின் மதிப்பு குறைந்து விடும் . எனவே டாட்டா நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான கே.எஸ். நிறுவனம் அமைத்து வரும் உயர்மின் கோபுர திட்டத்தை கைவிட வேண்டும்.

எங்களின் உணர்வுகளை மதிக்காமல் உயர்மின் கோபுரங்களை அமைக்கும் பட்சத்தில், நாங்கள் எங்கள் நீர்நிலைகளை காப்பாற்றுவதற்காக எங்களது உயிரையும் இழக்க தயாராக உள்ளோம். மேலும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் இத்துடன் கைவிடாவிட்டால் நாங்கள் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் ஒன்று திரண்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவோம் என விவசாயி செங்கோடன் தெரிவித்தனர்.