ஆட்சியர் அலுவலகத்தை கரும்பு விவசாயிகள் கரும்புகளுடன் முற்றுகை..!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை விவசாயிகள், கரும்புகளுடன் திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடந்த இப்போராட்டத்திற்கு சங்க தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். இவர்கள் அனைவரும், அரசு அறிவிக்கும் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.

பின்னர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் பழனியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 4 ஆண்டுகளாக முண்டியம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆகிய தனியார் சர்க்கரை ஆலைகளுக்கும், செங்கல்பட்டு படாலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் கரும்புகளை அனுப்பி அரசு அறிவிக்கும் சிறப்பு ஊக்கத்தொகையை பெற்று வந்தோம். ஆனால் இந்த ஆண்டு சர்க்கரைத்துறை ஆணையர், விவசாயிகளின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கூட்டுறவு ஆலைக்கு கரும்புகளை அனுப்ப வேண்டும் என கூறுகிறார்.

20 கி.மீ. தொலைவில் உள்ள ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்ப அனுமதிக்காமல் 150 கி.மீ. தொலைவில் உள்ள சர்க்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்துகிறார்கள். இதுசம்பந்தமாக பலமுறை மனு கொடுத்தும், விவசாயிகள் கோரும் ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்பவும், புதுச்சேரி சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளை பொது பகுதியாக அறிவிக்கவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக நாங்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளோம். எனவே 2022-23-ம் ஆண்டுக்கு நாங்கள், அருகில் உள்ள ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்பினோம். அதோடு சிறப்பு பருவத்திற்கும் அனுப்பி வருகிறோம். ஆனால் அரசு அறிவிக்கும் சிறப்பு ஊக்கத்தொகை எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனை பெற்றுத்தர மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடி சோதனை

விழுப்புரம் மாவட்டம், மயிலத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல்துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் காவல்துறையினர் நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தனர். அதன்பின்னர், அவர்கள் அலுவலகத்தின் ஜன்னல், கதவுகளை உள்புறமாக பூட்டிக்கொண்டு தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் சிக்கியது.

இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அலுவலக நேரம் முடிந்த பிறகு இரவு நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை நடத்திய சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு மனையை பத்திர பதிவு செய்ய ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் மீது புகார்…!

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள குமளம் கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான ஜெயகோபால், ஜெயராமன் ஆகிய இருவரும் தனது தந்தை ஆளவந்தார்சாமி பெயரில் உள்ள வீட்டு மனையை சகோதரர்கள் இருவரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள முடிவு செய்து அதற்காக வளவனூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யும்படி முறையிட்டுள்ளனர்.

அப்போது ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்த போது வில்லங்கம் சான்று கேட்டுள்ளனர். அதில் வில்லங்கம் இல்லையென சான்று பெற்று வரக்கூறியுள்ளனர். வில்லங்கம் இல்லையென கிராம நிர்வாக அலுவலர் சான்று அளித்துள்ளார். வில்லங்க சான்று இல்லையென என்ற சான்றுடன் சென்ற நபரிடம் மனையை பத்திர எழுத்தர் மூலம் பதிவு செய்யும் படியும், அதற்காக ஐம்பதாயிரம் செலவு ஆகும் என கூறி அனுப்பியுள்ளனர்.

மனை பதிவு செய்வதற்கு அனைத்தும் சரியாக உள்ளபோது ஏன் பத்திர எழுத்தரிடம் நாங்கள் செல்லவேண்டுமென கேட்டபோது, பத்திர பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் பூங்காவனம் லஞ்சம் தரவேண்டும் என தெரிவித்து பத்திர பதிவு செய்ய முடியாதென அனுப்பியுள்ளனர். இதனால் மனை பத்திர பதிவு செய்யமுடியாமல் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் பத்திர பதிவு செய்ய லஞ்சம் கேட்பதாக விழுப்புரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

நேற்று அண்ணாமலை தலைமையில் திருமணம்: இன்று குழந்தைக்கு பிறந்தநாள்…!

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் 39-வது பிறந்தநாளை, அக்கட்சியினர் பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில், தென்பசியார் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 39 ஜோடிகளுக்கு தாலியை எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்தி வைத்தார். இந்த திருமண ஏற்பாடுகளை தனியார் பள்ளி அறக்கட்டளையின் நிர்வாகி பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார்.

பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த திருமண விழாவில், தலா ஒரு ஜோடிக்கு… 4 கிராம் தங்கத்தில் தாலி, மணமக்களுக்கு பட்டுடைகள், மணப்பெண்ணுக்கான அலங்கார ஏற்பாடு, கல்யாண கவரிங் செட், மணமக்களின் உறவினர்களை அழைத்து வருவதற்கான வாகன ஏற்பாடு, தலா ஒரு ஐயர் மற்றும் மங்கள வாத்தியம், இருவேளை உணவு, திருமண பத்திர பதிவு மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

ஆனால், இங்கு திருமணம் செய்து வைக்கப்பட்டவர்களில் சிலருக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்றும், அவர்களில் சிலருக்கு குழந்தைகள் இருப்பதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. இது குறித்து விசாரித்தபோது, நேற்றைய தினம் அங்கு திருமணம் செய்துக்கொண்ட ஒரு தம்பதியின் குழந்தைக்கு இன்றைய தினம் பிறந்தநாள் என்ற தகவல்; அண்ணாமலை நடத்திவைத்த இந்த திருமணத்தில், 39 ஜோடிகளில் ஒருவராக நேற்றைய தினம் திருமணம் செய்துக்கொண்ட கிறிஸ்டோபர் தம்பதியின் குழந்தைக்குத்தான் இன்றைய தினம், திண்டிவனத்தில் உள்ள தனியார் மகாலில் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால், அண்ணாமலை தலைமையில் நடந்த திருமணம், திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.