விழுப்புரம் தாலுகா கெடார் அடுத்த அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலர் விழுப்புரத்தை சேர்ந்த சங்கீதா. திருக்கை அருகே நகர் கிராமத்தை சேர்ந்த அருளாந்து மனைவி அன்னம்மாள் என்பவரின் மாமனார் மாணிக்கம், அவரது கணவரின் அண்ணன் சவுரிமுத்து ஆகிய இருவரும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். அப்போது இவர்கள் இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய தவறிவிட்டார்.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவருக்கும் இறப்பு சான்றிதழ் கேட்டு தனித்தனியே விழுப்புரம் கோட்டாட்சியரிடம் மனுக்கள் கொடுத்துள்ளார். அரியலூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை நேரில் சந்தித்து இறப்பு சான்றிதழ் சம்பந்தமாக ஆன்லைனில் பதிவு செய்ய அன்னம்மாள் கேட்டுள்ளார். அப்போது அன்னம்மாளிடம் மனு கொடுத்து கண்டுகொள்ளாமல் விட்டால் எப்படி, ஆன்லைனில் பதிவு செய்வது நான் தான் என்றும் ஆன்லைனின் பதிவு செய்ய தலா 500 வீதம் இருவருக்கும் ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விருப்பமில்லாததால் அன்னம்மாள், விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால்சுதர் தலைமையிலான காவல்துறை ரசாயனம் தடவிய ரூ.1,000 பணத்தை அன்னம்மாளிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் படி கூறியுள்ளனர்.
இதையடுத்து நேற்று மதியம் அன்னம்மாள் கிராம நிர்வாக அலுவலரிடம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்தபோது கிராம நிர்வாக அலுவலர் அதனை பெற்றதும் அங்கு மறைந்திருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை காவல்துறை கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.