ரூ.5,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது..!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணூத்து கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் பொறியியல் படித்து முடித்து இவர் சொந்தமாக ஜே.சி.பி. இயந்திரம் வாங்கி வாடைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் விராலிமலையை சேர்ந்த ரங்கசாமி என்பவரிடம் கடந்த 2021 -ம் ஆண்டு மாத வாடகைக்கு தனது ஜேசிபி இயந்திர வாகனத்தை பார்த்திபன் கொடுத்திருக்கிறார்.

வண்டியை வாடகைக்கு எடுத்த ரங்கசாமி சில மாதங்கள் மட்டும் வாடகையை கொடுத்துவிட்டு வாகன உரிமையாளரான பார்த்திபனுக்கு தெரியாமலேயே வண்டியை விற்றுவிட்டார். இதனால் அதிர்ந்து போன பார்த்திபன் தன்னிடம் மோசடி செய்த ரங்கசாமி மீது புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதைத் தொடர்ந்து பார்த்திபனின் ஜே.சி.பி. இயந்திரத்தை மீட்டு அதனை மணப்பாறை நீதிமன்றத்தில் காவல்துறை ஒப்படைத்தது. அங்கிருந்து தனது வாகனத்தை மீட்பதற்கு பல்வேறு நடைமுறைகள் இருந்ததால், தனது ஜே.சி.பி.யை விரைந்து தன்னிடம் ஒப்படைக்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

அந்த மனு மீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 5 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பு சான்றிதழை மணப்பாறை நீதிமன்றத்தில் கொடுத்துவிட்டு ஜேசிபியை மீட்டுச் செல்லலாம் என உத்தரவிட்டது. அதன் பேரில் சொத்து மதிப்புச் சான்றிதழ் கோரி மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் அவர் மனு கொடுத்திருக்கிறார். அந்த மனுவை விசாரித்து பரிந்துரை செய்யுமாறு கண்ணூத்து கிராம நிர்வாக அதிகாரி அமீர்கானுக்கு தாசில்தார் அலுவலகம் ஃபார்வாட் செய்திருக்கிறது.

ஆனால், பார்த்திபனிடம், கண்ணூத்து கிராம நிர்வாக அதிகாரி அமீர்கான் ரூ.5,000 லஞ்சம் கொடுத்தால் சொத்து மதிப்புச் சான்றிதழுக்கு உடனே பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார். இதனால் கொதித்துப் போன பார்த்திபன் இது குறித்த தகவலை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறை ரசாயனம் தடவிய ரூ.5,000 பணத்தை பார்த்திபனிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் படி கூறியுள்ளனர்.

இதையடுத்து பார்த்திபன் கிராம நிர்வாக அலுவலரிடம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்தபோது கிராம நிர்வாக அலுவலர் அதனை பெற்றதும் அங்கு மறைந்திருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை காவல்துறை கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் அமீர்கானை கைது செய்தனர்.