செல்போனால் ஏற்பட்ட விபரீதம்..! அண்ணன் தங்கை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு..!

இன்றைய நவீன உலகில் செல்போன் மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் அதை பயன்படுத்தும் விதத்தை பொறுத்து அது தரும் நன்மையை விட தீமை அதிகரித்து விடுகிறது. இன்று பல் முளைக்காத சின்னஞ்சிறு குழந்தை செல்போனை திறந்து தேவையான கார்ட்டூன் படங்களை பார்த்தும் ரசிக்கிறது. குழந்தைகள் எப்போதும் செல்போனில் தான் விளையாடும்.

நாற்பது வயதில் பலர் மொபைல் போனில் புது, புது விசயங்களை தெரிந்து கொள்ள முடியாமல் திணறும் நிலையில் என் குழந்தை எல்லா அப்ளிகேஷனையும் திறந்து பார்த்து விடும் என தங்கள் குழந்தைகளை பற்றி தாய்மார்கள் பெருமையுடன் சொல்லும் சேதியும் உண்டு. ஆனால் தனது குழந்தை செல்போன் என்ற ஆக்டோ பசால் கொஞ்சம் கொஞ்சமாக வளைக்கப்படுகிறது என்பதை அப்போது உணர்வதில்லை.

ஒரு கட்டத்தில் செல்போன் பிடியில் இருந்து குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் படாத பாடுபடுகிறார்கள். எந்நேரமும் செல்போனிலேயே தங்கை மூழ்கி கிடந்ததால், அவருக்கு அண்ணன் அட்வைஸ் செய்துள்ளார். கடைசியில் இப்படியொரு கொடுமை கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மண்டையூர் சோதிராயன்காடு பகுதியை சேர்ந்த தம்பதி ஜீவிதா சித்திரகுமார். இவர்களுக்கு 18 வயதில் மணிகண்டன் என்ற மகனும், 16 வயதில் பவித்ரா என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் ஐடிஐ படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். பவித்ரா மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்நிலையில் பவித்ரா நேற்று முன்தினம் இரவு செல்போனை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாராம்.. இதனால் அவரை பெற்றோர் கண்டித்து இருக்கிறார்கள். அப்போது மணி இரவு 11 ஆகிவிட்டது.. 11 மணிக்கு மேலும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த போது, தங்கையிடம் இருந்த செல்போனை பறித்து, தூங்க செல்லுமாறு மணிகண்டன் அட்வைஸ் செய்துள்ளார்.. ஆனால், போனை திருப்பிக்கேட்டு அண்ணனிடம் சண்டை போட்டுள்ளார் பவித்ரா.

இந்த சண்டையில்தான், மணிகண்டன் செல்போனை கீழே போட்டு உடைத்துவிட்டதாக தெரிகிறது. செல்போன் தன்னுடைய கண்ணெதிரே உடைந்துவிட்டதை பார்த்து பவித்ரா அதிர்ச்சி அடைந்தார். மேலும், இதில் மனமுடைந்த பவித்ரா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சொல்லிக்கொண்டே, வீட்டுக்கு பக்கத்திலிருந்த கிணற்றில் குதித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன், தன்னுடைய தங்கையை காப்பாற்றுவதற்காக அவரும் பின்னாடியே கிணற்றில் குதித்தார். ஆனால், அண்ணன், தங்கை இருவருமே தண்ணீரில் தத்தளிக்க துவங்கினார்கள். சிறிது நேரத்தில் இருவருமே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, நவல்பட்டு தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி, பவித்ரா, மணிகண்டன் இருவரையும் சடலமாகவே மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து, மாத்தூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனுக்காக, அண்ணன் தங்கையிடையே ஏற்பட்ட சண்டையில் இருவருமே கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.