சாட்டை துரைமுருகனிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 2022-ம் ஆண்டு மே மாதம் காவல்துறை நடத்திய வாகன சோதனையில், பைக்கில் வந்த 2 பேர் வெடி பொருட்கள், துப்பாக்கிகளுடன் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி என்பதும் இருவரும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்புகளுடன் நேரடி தொடர்பு இருந்து வந்ததும் தெரிந்தது.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழ்நாட்டில் ஆயுதப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டதும், இதற்காக யூடியூப் மூலம் துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகள் தயாரித்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு ஓமலூர் காவல் நிலையத்தில் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து கைதான 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் 2 பேரும் ஈடுபட்டு வந்ததும், அதற்கு திருச்சியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபரான சாட்டை துரைமுருகன், கோயம்புத்தூர் ஆலாந்துறையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி ரஞ்சித்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக உள்ள விஷ்ணு பிரதாப், முன்னாள் நிர்வாகி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாலாஜி ஆகியோர் தொடர்பில் இருந்து வந்ததாகவும், ஆயுதப்புரட்சிக்கு தேவையான நிதி உதவியை இவர்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்று தந்ததாகவும் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தனர்.

அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள், சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்தனர். அதில், சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி, ரஞ்சித்குமார் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு நேரடி தொடர்பு இருந்தது உறுதியானது. அதற்கான ஆதாரங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்தனர். பின்னர் அதிரடியாக கடந்த வாரம் சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி, ரஞ்சித்குமாரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து விடுதலை புலி அமைப்புகளிடம் பல கோடி ரூபாய் நிதி சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியாமல் பெற்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று சென்னையில் உள்ள என்ஐஏ மண்டல அலுவலகத்தில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. அந்த சம்மனை தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு சாட்டை துரைமுருகன் மற்றும் இசை மதிவாணன் ஆகியோர் தங்களது வழக்கறிஞர்களுடன் ஆஜராகினார்.