பிரேமலதா விஜயகாந்த்: படகு, பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் அரசை இப்போது தான் பார்க்கிறேன்…!

ஒரு நாள் பெய்த மழைக்கு மீனவர்களின் படகுகளையும், தீபாவளிக்காக பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்துள்ளனர். படகு மற்றும் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கக்கூடிய அரசை நான் இப்போது தான் தமிழகத்தில் பார்க்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டார். இதையடுத்து திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம் பள்ளிதெரு பகுதியில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியிலும், ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் தேமுதிக கிளைசெயலாளர் சங்கரின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியிலும் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார். அப்போது, ஒரு நாள் பெய்த மழை வெள்ளத்துக்கு சென்னை தாங்கவில்லை. எங்கு பார்த்தாலும் சாலைகளில் குளம் போல் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதிப்பட்டனர். இது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான். மெயின் பிக்சர் டிசம்பர் மாதம் தான். அப்போது பெய்யும் மழைக்கு தமிழக அரசு எந்த அளவுக்கு தயாராக இருக்கப் போகிறது என்பது அப்போது தான் தெரியும்.

ஒரு நாள் மழைக்கே, தமிழக அரசின் சாதனையென்று சொல்லிக் கொண்டு இருக்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது சாதனை கிடையாது. அடுத்து வருகின்ற பெரு மழைக்கு தயாராக வேண்டும் என்பதுதான். ஒரு நாள் பெய்த மழைக்கு மீனவர்களின் படகுகளையும், தீபாவளிக்காக பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்துள்ளனர். படகு மற்றும் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கக்கூடிய அரசை நான் இப்போது தான் தமிழகத்தில் பார்க்கிறேன்.

தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்துக்கு தூர்தர்ஷன் ஊழியர்கள் தவறு செய்துவிட்டதாக மன்னிப்புக் கேட்டுவிட்டனர். இதற்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் ஆளுநரை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டனத்துக்குரியது. தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசு தினத்துக்கும் சுதந்திர தினத்துக்குமான தேதியைக் கூட சரியாகச் சொல்ல முடியவில்லை, அப்படி இருக்கும் பட்சத்தில் இதுபோல தவறுவதும் சகஜம் தான்.

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் விவகாரத்தில் திமுக அரசு அரசியல் செய்து வருகிறது. சென்னை மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் கஞ்சா, கள்ளச்சாராயம், வெளி மாநில மது விற்பனை என பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தில் நிலவுகிறது. மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது, விவசாயம் இல்லை, நெசவுத்தொழில் முற்றிலும் அழிந்து வருகிறது. இதையெல்லாம் தமிழகத்தில் மாற்ற வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்: ஒரு நாள் பெய்த மழை வெள்ளத்துக்கு சென்னை தாங்கல…!

சிரித்த முகத்தோடு மின்னும் விஜயகாந்த் சிலையை திறந்து வைத்த பிரேமலதா..!

விஜயகாந்த்தின் 72-வது பிறந்தநாளான இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் சிலையை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். 1970-களில் மதுரையிலிருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்து சினிமா துறையில் அடிமட்டத்தில் இருந்து போராடி வாய்ப்புகளைப் பெற்று, பின் படிப்படியாக ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து உச்ச நடிகராக விஜயகாந்த் விளங்கியவர்.

150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், இரண்டு முறை ஃபிலிம்பேர் விருதையும், மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் விஜயகாந்த் வென்றவர். நடிகர் சங்கத் தலைவராக திறம்படச் செயல்பட்டு, நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு வளர்ச்சிப் பாதைக்கு விஜயகாந்த் திருப்பியவர்.

கேப்டன் என தமிழ் சினிமா கலைஞர்களாலும், ரசிகர்களாலும், பொதுமக்களாலும் அன்போடு விஜயகாந்த் அழைக்கப்படுபவர். விஜயகாந்த்தின் அலுவலகத்துக்குச் சென்றால், யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் நிலையை உருவாக்கி விஜயகாந்த் வைத்தவர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கி அரசியலிலும் தனது வலிமையான முத்திரையைப் பதித்த விஜயகாந்த், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி 71 வயதில் விஜயகாந்த் மறைந்தார். விஜயகாந்த்தின் மறைவின் போது கலங்கிய கண்ணீர் ஒரு பேராறு. தனது கொடைத் தன்மையால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த விஜயகாந்த்தின் 72-வது பிறந்தநாள் இன்று. விஜயகாந்த் பிறந்த இன்றைய நாள் தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து,தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். விஜயகாந்த் சிலை திறப்பு விழாவில் விஜயகாந்தின் மகன்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். விஜயகாந்த்தின் சிலை, சிரித்த முகத்தோடு, கையை மடக்கி வெற்றிக் குறி காட்டிய காட்டிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை திறந்து வைத்த பிரேமலதா, கண் கலங்கினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவுருவச் சிலையை நிறுவ அனுமதிகோரி வட்டாட்சியரிடம் மனு..!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட குள்ளஞ்சாவடி குறிஞ்சிப்பாடி, மீனாட்சி பேட்டை, வடலூர் வடக்குத்து ஆகிய ஐந்து இடங்களில் தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கு மாவட்ட அவை தலைவர் ராஜாராம் அவர்களின் வழிகாட்டுதலின்படி புரட்சிக் கலைஞர் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரு உருவச்சலையை நிறுவ அனுமதி வழங்க கோரி குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கே. பி.ஆர் சரவணன் தலைமையில் தேமுதிகனர் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுரேஷ்குமார் அவர்களிடம் மனு அளித்தனர்.

இந்த நிகழ்வில் தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் சமோ சுரேஷ், குறிஞ்சிப்பாடிமேற்கு ஒன்றிய செயலாளர் வடக்குத்து வேல்முருகன், குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் சரவணன் வடலூர் நகர செயலாளர் ஜாகிர் உசேன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொருளாளர் ஜெயபிரகாஷ், கிழக்கு ஒன்றிய பெருமாள், குறிஞ்சிப்பாடி பேரூர் கழக அவைத்தலைவர் ஜோதி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஜோதி, ஜெய்சங்கர், பிரபாகரன், செல்வம், வெற்றிவேல், வேல்முருகன், நடராஜ், ஆரோக்கியராஜ், சத்யராஜ், சிவசுப்பிரமணியன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

காற்றில் கலந்த கருப்பு நிலா.. சோகத்தில் மூழ்கிய தமிழகம்..!

கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்கரார் கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற யாரும் பசியோடு வெளியே வந்தது இல்லை என்றும் திரையுலகினர் புகழாரம் சூட்டும் நடிகரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். நாளை மாலை 4.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழகமெங்குமிருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

விஜயகாந்த் மறைவுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளது. திரை தொழிலாளர்கள், உதவி இயக்குநர்கள், நாளைய இயக்குநர்கள் நல்ல நிலையை அடையும்வரை அவர்களின் பசியை போக்கியவர். நாளை திரைப்படத் துறையில் அனைத்து பணிகளை நிறுத்தி வைப்பதாக பெப்சி அறிவித்துள்ளது.

‘விஜயகாந்த் என்பவர் நடிகர் அல்ல, அவர் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் காட்ஃபாதர்’. ஊமை விழிகள் படம் மூலம் எண்ணற்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை தந்த மகா கலைஞன். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் விஜயகாந்தை மனதார போற்றும் என்று தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி இரங்கல் தெரிவித்துள்ளது.

கள்ளழகர் படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்தது காலத்தால் அழியாத பரிசு என நடிகர் சோனு சூட்வும், சிறந்த பண்பாளர், பன்முகத் திறமை கொண்டவர், புத்திக்கூர்மையான அரசியல்வாதி விஜயகாந்த். நேரடியாக தெலுங்கு படங்களில் நடிக்காவிட்டாலும் தெலுங்கு ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டவர் விஜயகாந்த் மறைந்த செய்தியை அறிந்து இதயம் நொறுங்கிப் போனதாக நடிகர் சிரஞ்சீவி உருக்கமாக தெரிவித்துள்ளார். நமது அன்பான கேப்டன் நம்மிடம் வெகு சீக்கிரத்தில் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றுவிட்டார் என்று நடிகர் சிரஞ்சீவி வேதனை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், அரசியல் தலைவராக பொதுச்சேவையில் விஜயகாந்த் காட்டிய அர்ப்பணிப்பு வியக்க வைத்தது என கிரண் ரிஜிஜூ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். கட்சியின் பெயரில்கூட திராவிட உணர்வை பதித்தவர் விஜயகாந்த். வெள்ளை உள்ளம் கொண்டு கருப்பு வைரமாகவே வாழ்ந்தவர்; சிறந்த மனிதர் என்ற பெருமைக்குரியவர் விஜயகாந்த் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற ஸ்ரீ தில்லை காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு

கடலூர் மாவட்டம், சேப்பளாநத்தம் அடுத்த மேட்டுக்குப்பம் ஆர்ச் கேட் அருகில் உள்ள வீனங்கேணி ‌ ஸ்ரீ தில்லை காளியம்மன் கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற வேண்டி நேற்று கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை ஊஞ்சல் தாலாட்டு மற்றும் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த சிறப்பு வழிபாட்டில் கம்மாபுரம் தெற்கு ஒன்றிய தேமுதிக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஞான பண்டிதன், மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கமாயவேல், கருப்பு செந்தில், ஒன்றிய பொறுப்பாளர் ராமமூர்த்தி, பி.எம்.எஸ் சுரேஷ், விஜயகுமார், ஒன்றிய தலைவர் ராஜவேல் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் மணிகண்டன், சுரேஷ் சங்கர், பெருமாள் கனகசபை , ராஜா, அரசன் தேவராசு , வடிவேல் சிவா சிவராஜன், ராஜசேகர், கே.ஜி.கே முருகன் விநாயகம் சிரஞ்சீவி மகளிர் அணி தலைவி மஞ்சுளா சந்திரசேகர் மாலா மீனாட்சி கஜேந்திரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் தேமுதிக தெற்கு ஒன்றியம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.